📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 27, 2026 07:04 AM

சிங்கப்பூர் வாசிப்பு: புத்தகங்கள் மற்றும் ரீட்எஸ்ஜி

சிங்கப்பூர் வாசிப்பு: புத்தகங்கள் மற்றும் ரீட்எஸ்ஜி

அதிகாரபூர்வ அளவீடுகளின்படி, சிங்கப்பூர் வாசிப்பில் சிறந்து விளங்குகிறது.

அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுத் திட்ட ஆய்வில் (PISA), வாசிப்பு, கணிதம் மற்றும் அறிவியலில் சிங்கப்பூர் மாணவர்கள் உலகளவில் முதலிடம் பெற்றனர். ஆனால், ஆழமான, மனமகிழ்ச்சிக்கான வாசிப்பு வேறுவிதமாக உள்ளது.

2024ஆம் ஆண்டு தேசிய நூலக வாரியம் மேற்கொண்ட ஆய்வின்படி, 89 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் வாரத்திற்கு ஒருமுறைக்குமேல் படிக்கின்றனர். அவர்களில் 76 விழுக்காட்டினர் செய்திகளையும் 65 விழுக்காட்டினர் சமூக ஊடகங்களையும் நாடுகின்றனர்.

ஆனால், 28 விழுக்காட்டினர் மட்டுமே வாரந்தோறும் புத்தகம் வாசிக்கின்றனர். மேலும், 62 விழுக்காட்டினர் மற்ற வேலைகளுக்கு முன்னுரிமை தருவதாகவும் 38 விழுக்காட்டினர் விரைவில் சலிப்படைவதாகவும் கூறுகின்றனர்.

மக்கள் தகவல்களைப் பெறுவதில் சவால்கள் எதுவும் இல்லை. ஆனால், எந்த நோக்கமும் இன்றி மகிழ்வுக்காகப் படிப்பதில்லை.

இதனை எதிர்கொள்ளும் வகையில் ‘ரீட்எஸ்ஜி’ (ReadSG) என்ற ஐந்தாண்டு இயக்கத்தை தேசிய நூலக வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாள்தோறும் 15 நிமிடங்கள் புத்தகம் படிப்பதைப் பதிவிட்டு பொதுமக்கள் வெகுமதி பெறலாம்.

கவனச்சிதறல் நிறைந்த காலத்தில் இது ஒரு நல்ல முயற்சியாக இருந்தாலும், வாசிப்பை மற்றொரு கடமையாக மாற்றிவிடும் அபாயமும் உள்ளது. அதே வேளையில், தேர்வுக்காக மட்டுமே புத்தகங்களை நாடாமல் வாசிப்பின் இன்பத்தையும் பயனையும் அறிந்து, அனைவரும் அதனை வழக்கமாக்கிக்கொள்வதை ‘ரீட்எஸ்ஜி’ ஊக்குவிக்கிறது.

இது தொடக்கம்தான். கைப்பேசிச் செயலிகளையும் நேரக் கட்டுப்பாட்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நேரத்தையே மறந்து வாசிப்பில் மூழ்கும்போதுதான் உண்மையான வாசிப்புப் பண்பாடு உருவாகும்.