சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கமா? சஞ்சு சாம்சன் போட்டி.. பத்ரிநாத் அதிரடி பதில்
சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கமா? சஞ்சு சாம்சன் போட்டி.. பத்ரிநாத் அதிரடி பதில்
சென்னை: தோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில், அந்த அணி எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறவில்லை. ஐபிஎல் 2024-ல் 5-வது இடத்தையும், 2026 ஐபிஎல் தொடரில் 8-வது இடத்தையும் பிடித்து, அடுத்தடுத்து இரண்டு சீசன்களிலும் சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.
இதனால் 2027 ஐபிஎல் தொடரில் ருதுராஜை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் ரசிகர்கள் மத்தியில் வலுத்து வருகின்றன. குறிப்பாக, ராஜஸ்தான் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு வந்த சஞ்சு சாம்சனிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சிஎஸ்கே அணிக்காக 95 போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "அடுத்த மெகா ஏலத்திற்கு முன்பாக தற்போதைய வீரர்களுடன் விளையாட இன்னும் ஒரே ஒரு சீசன் மட்டுமே உள்ளது. எனவே 2027 தொடரில் சிஎஸ்கே தனது கேப்டனை மாற்றக் கூடாது" என்று ருதுராஜுக்கு ஆதரவு தெரிவித்தார்.
ருதுராஜ் இதுவரை சிஎஸ்கே அணியை 33 போட்டிகளில் வழிநடத்தி, 14 வெற்றிகளையும் 19 தோல்விகளையும் மட்டுமே பெற்றுள்ளார். 2026 சீசனில் பேட்டிங்கிலும் அவர் 337 ரன்கள் மட்டுமே எடுத்து 123.44 என்ற குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் தடுமாறினார்.
அதேநேரம் சஞ்சு சாம்சன் 477 ரன்கள் குவித்து, 2 சதங்களுடன் 165.62 ஸ்ட்ரைக் ரேட்டில் சிஎஸ்கே அணியின் அதிக ரன் குவித்த வீரராக மிரட்டினார். சாம்சன் ஏற்கனவே ராஜஸ்தான் அணியை 2022-ல் இறுதிப்போட்டி வரை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் என்றாலும், மெகா ஏலத்திற்கு முன்பு அவசர முடிவை எடுக்காமல் ருதுராஜுக்கே சிஎஸ்கே நிர்வாகம் மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் எனத் தெரிகிறது.