📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 20, 2026 01:03 PM

 மீனாட்சி கோயிலில் பிஸ்கட், தண்ணீர் வழங்கல்

 மீனாட்சி கோயிலில் பிஸ்கட், தண்ணீர் வழங்கல்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிஸ்கட், தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் செப்.,17ல் நடந்தது. நேற்றுமுன்தினம் துவங்கிய மண்டல பூஜை அக்.,2 வரை நடக்கிறது. இன்று(செப்.,20) வரை இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கிறார்கள். அவர்களுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் வாங்கிய நிலையில், நேற்று கூடுதலாக 30 ஆயிரம் பாட்டில் வாங்கப்பட்டது. இன்று வரை கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று காலை சர்வர் பிரச்னையால் அலைபேசியை, மையத்தில் ஒப்படைத்து பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதில் இடையூறு ஏற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து போலீசாரின் சோதனையின்றி பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல அனுமதியில்லை. கும்பாபிஷேகம் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் சோதனை செய்யாமல் பக்தர்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.

இதை பயன்படுத்தி சிலர் அலைபேசியில் மூலஸ்தானத்தை படமாக, வீடியோவாக எடுத்ததை தடுத்தோம். இன்றும் பக்தர்கள் அதற்கு முயற்சித்தால் போலீசார் மூலம் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.