சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இயந்திர கோளாறு: 322 பேர் தப்பினர்
சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இயந்திர கோளாறு: 322 பேர் தப்பினர்
மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து வழக்கம் போல தினமும் நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூருக்கு செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட தயாரானது. விமானத்தில் பயணம் செய்ய இருந்த 310 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உட்பட 322 பேர் ஏறி அமர்ந்தனர். ஓடுபாதையில் விமானம் ஓட தொடங்கியபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்து நிறுத்தினார். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து விமானம் ஓடுபாதையில் இருந்து, இழுவை வண்டி மூலமாக, விமானம் புறப்பட்ட இடத்திற்கு இழுத்து கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதோடு விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் பயணிகள் அனைவரும், கீழே இறக்கப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
இன்று அதிகாலை 5 மணி வரையில் விமானத்தை பழுது பார்க்க முடியவில்லை. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்றும் இன்று இரவு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் பயணிகள் அனைவரும், சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இயந்திர கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 310 பயணிகள் உட்பட 322 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.