📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 04, 2026 09:04 AM

மோசடி விசாரணை: $39 மில்லியன் வர்த்தகக் கட்டடப் பணம் பறிமுதல்

மோசடி விசாரணை: $39 மில்லியன் வர்த்தகக் கட்டடப் பணம் பறிமுதல்

கம்போடியாவின் பிர்ன்ஸ் குழுமம்மீது அனைத்துலக அளவில் நடந்துவரும் மோசடி விசாரணையின் அங்கமாக அந்நிறுவனத்துடன் தொடர்புடைய வர்த்தகக் கட்டடத்தின் விற்பனையில் ஈட்டப்பட்ட $39 மில்லியன் மதிப்புள்ள பணம் சிங்கப்பூர் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.

புக்கிட் மேரா வட்டாரத்தில் 32,000 சதுர அடி பரப்பளவு கொண்ட அக்கட்டடத்தை உள்ளூர் வாகன விற்பனை நிறுவனம் இவ்வாண்டு ஜுன் மாதம் பேரம் பேசி, செப்டம்பர் மாதம் தனிப்பட்ட முறையில் வாங்கி அதன் உரிமையை கைமாற்றிக்கொண்டது.

வட்டார மோட்டார் வாகன வர்த்தகத்தில் இயங்கிவரும் ‘ஜேக்ஸ்பீட் ஹோல்டிங்ஸ்’ அக்கட்டடத்தை வாங்கியது. அந்நிறுவனம் வாகனங்களுக்கான நிதி, சில்லறை விற்பனை, வாடகை, காப்புறுதி, வாகன, விமான உள்வடிவமைப்புக்கான உபகரணங்கள் போன்ற சேவைகளை வழங்கிவருகிறது.

கட்டடத்தின் 99 ஆண்டு குத்தகையில் இன்னும் 36 ஆண்டுகள் உள்ளன. அதனை 2023ஆம் ஆண்டில் 2ஜேகேபி என்ற நிறுவனம் வாங்கியது. உள்ளூர் வர்த்தகரான டான் இயு கியாட்டின் மகள் அதன் நிறுவனர் ஆவார்.

கள்ளப் பணக் குற்றங்கள் தொடர்பில் காவல்துறை 2025 நவம்பர் மாதம் டானை கைது செய்தது. கம்போடியாவைத் தலைமையகமாகக் கொண்டிருந்த பிரின்ஸ் குழுமத்தின் தலைவர் சென் ஸீ உடன் அவர் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது.

அனைத்துலக அளவில் பிர்ன்ஸ் குழுமமும் அதன் கூட்டு நிறுவனங்களும் இணைய மோசடி, கள்ளப் பணப் பரிவர்த்தனை போன்ற பல மோசடிகளில் ஈடுபட்டன என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

சென் ஸீயுடன் தொடர்பில் இருந்தோர் உட்பட அவரது நிறுவனங்கள் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்துவருவதாக சிங்கப்பூர் காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.