📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 24, 2026 05:01 PM

செலுத்தப்படாத மத்திய சேமநிதி பங்களிப்பு; ஸ்ரீசான் மீது குற்றச்சாட்டு

செலுத்தப்படாத மத்திய சேமநிதி பங்களிப்பு; ஸ்ரீசான் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் ‘ஸ்ரீசான் எக்ஸ்பிரஸ் ஃபுட் ஹோல்டிங்ஸ்’ பரோட்டா உணவகச் சங்கிலி நிறுவனம், தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய மத்திய சேமநிதித் தொகையைச் செலுத்த தவறியதற்காக நீதிமன்றத்தில் வழக்கு எதிர்கொண்டுள்ளது.

புதன்கிழமையன்று (செப்டம்பர் 23) நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஏறத்தாழ $30,000 மத்திய சேமநிதித் தொகையை நிலுவையாக வைத்திருக்கின்றது என்பது தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, ‘ஸ்ரீசான் எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தனது ஆறு ஊழியர்களுக்கு சேமநிதித் பங்களிப்பைச் செலுத்தத் தவறியிருந்தது.

முன்னதாக, இந்த நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கான காலக்கெடு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதன்கிழமை (செப்டம்பர் 23) விசாரணையின்போது, எஞ்சியுள்ள நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு நான்கு வாரக் கால அவகாசம் அளித்தது.

வழங்கப்பட்ட கெடுவுக்குள் நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுவிடும் என்று ஸ்ரீசான் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜெயந்தி இளங்கோவன் கூறினார்.

இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இன்னும் $23,000 நிலுவைத் தொகையைச் செலுத்து வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். அத்துடன், உணவகச் சங்கிலியின் வியாபாரம் மிகவும் மந்தமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஆண்டின் முற்பாதிக்குப் பிறகு வர்த்தகம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வர்த்தகம் தொடர்ந்து மந்தமாகவே இருந்து வருகிறது. நாங்கள் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முயன்று வருகிறோம். எதிர்பாராதவிதமாக நிலைமை இவ்வாறு ஆகிவிட்டது,” என்று அவர் கூறினார்.

2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்ரீசான் எக்ஸ்பிரஸ் உணவகம், சிங்கப்பூரின் சிராங்கூன் கார்டன்ஸ், ஹவ்காங், பீஷான், தெம்பனிஸ், புக்கிட் பாத்தோக் ஆகிய ஐந்து இடங்களில் கிளைகளை இயக்கி வருகிறது.