SA vs AUS: பாகிஸ்தான் வீரரின் உலக சாதனையை அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்க வீரர் ப்ரீட்ஸ்கே
SA vs AUS: பாகிஸ்தான் வீரரின் உலக சாதனையை அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்க வீரர் ப்ரீட்ஸ்கே
டர்பன்: தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கே சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்கின் உலக சாதனையை முறியடித்தார். தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. முதலில் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டி டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி பேட்டர் மேத்யூ ப்ரீட்ஸ்கே சதம் அடித்த நிலையில் புதிய உலக சாதனையையும் படைத்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் 14 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற இமாலய சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் 4-வது வீரராகக் களமிறங்கிய மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 106 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 112 ரன்கள் விளாசினார். இந்த அதிரடி சதத்தின் மூலம், தனது 14 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அவரது மொத்த ரன் எண்ணிக்கை 822 ஆக உயர்ந்தது.
முன்னதாக பாகிஸ்தான் பேட்டர் இமாம் உல் ஹக் தனது முதல் 14 இன்னிங்ஸ்களில் 759 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக நீடித்தது. அந்த சாதனையை ப்ரீட்ஸ்கே தற்போது உடைத்து இருக்கிறார். கடந்த 2025 பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலேயே 150 ரன்கள் குவித்து அசத்திய இவர், இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 6 அரை சதங்களை அடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் மார்கோ ஜான்சனுடன் ஜோடி சேர்ந்த ப்ரீட்ஸ்கே, 6-வது விக்கெட்டுக்கு வெறும் 81 பந்துகளில் 107 ரன்கள் சேர்த்தார். மார்கோ ஜான்சன் 59 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 6-வது விக்கெட்டுக்கு தென்னாப்பிரிக்கா எடுத்த 2-வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். சர்வதேச அரங்கில் அடுத்தடுத்து சாதனைகளைப் படைத்து வரும் ப்ரீட்ஸ்கேவின் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவர்களது ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 298 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.