📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 24, 2026 05:04 PM

சாபின் நடனம்: யுனெஸ்கோ மரபுடைமைக்கான சிங்கப்பூர் பரிந்துரை

சாபின் நடனம்: யுனெஸ்கோ மரபுடைமைக்கான சிங்கப்பூர் பரிந்துரை

தென்கிழக்காசியாவின் பாரம்பரிய நிகழ்த்துகலையான ‘சாபின்’ (Zapin) நடனத்தை, யுனெஸ்கோவின் தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமைப் பட்டியலில் சேர்ப்பதற்குச் சிங்கப்பூர் பரிந்துரைக்கவுள்ளது.

இக்கூட்டு முயற்சியில் புருணை, இந்தோனீசியா, மலேசியா ஆகிய அண்டை நாடுகளும் சிங்கப்பூருடன் கைகோக்கின்றன.

நிகழ்த்துகலை ஒன்றை யுனெஸ்கோவின் இப்பட்டியலுக்குச் சிங்கப்பூர் கூட்டாகப் பரிந்துரைப்பது இதுவே முதன்முறை.

உணவங்காடிக் கலாசாரம் (2020), கெபாயா ஆடை (2024), தற்போது மதிப்பீட்டில் இருக்கும் சிங்கே ஊர்வலம் ஆகியவற்றைத் தொடர்ந்து, யுனெஸ்கோ பட்டியலுக்கான சிங்கப்பூரின் நான்காவது முன்மொழிவாக இது அமைகிறது.

நான்கு நாடுகளும் இதற்கான அதிகாரபூர்வ விண்ணப்பத்தை 2027 மார்ச் மாதத்தில் யுனெஸ்கோவிடம் சமர்ப்பிக்க இலக்கு வைத்துள்ளதாக வியாழக்கிழமை (செப்டம்பர் 24) தெரிவிக்கப்பட்டது.

பங்கேற்கும் நான்கு நாடுகளிலும் சாபின் நடனத்தைப் பயிலும் சமூகங்கள் இக்கலையைத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டுசேர்த்து வருகின்றன. இது வட்டார அளவிலான பகிரப்பட்ட மரபுடைமையாகத் திகழ்வதோடு, சமூகங்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் விளங்குகிறது.

“நமது வாழும் மரபுடைமையின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த அருமையான நடன வடிவத்தை இளைய தலைமுறையினர் உயிர்ப்புடன் வைத்திருக்கவும், இதன் வளமான பாரம்பரியத்தைச் சிங்கப்பூரர்கள் அறிந்து ஏற்றுக்கொள்ளவும் இந்த வரலாற்று மைல்கல் ஊக்கமளிக்கும் என நம்புகிறோம்,” என்று தேசிய மரபுடைமைக் கழகத் தலைமை நிர்வாகி சாங் ஹுவீ நீ குறிப்பிட்டார்.

இசை, பாடல், நடனத்தின் கலை நயம்

சாபின் என்பது இசை, பாடல், நடனம் ஆகிய மூன்று அங்கங்களின் பிரிக்க முடியாத கலை ஒருங்கிணைப்பாகும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

கடந்த காலத்தில் சிங்கப்பூரில் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் மட்டுமே சாபின் ஆடப்பட்டது. ஆனால் இன்று, மலாய் நடனக் குழுக்கள், மாணவர்கள், பல்வேறு அமைப்புசாரா கலைக்குழுவினர் எனப் பலராலும் நிகழ்ச்சிகளிலும் கலைவிழாக்களிலும் இக்கலை பரவலாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.

மேலும், முற்காலத்தில் ஆண்கள் மட்டுமே முதன்மையாக சாபின் ஆடிய நிலை மாறி, இக்காலத்தில் மேடைகளில் ஆண்களும் பெண்களும் இணைந்து ஆடும் வழக்கமும் பரவலாகக் காணப்படுகிறது.

துள்ளலான மெட்டுகளுக்கேற்ப நேர்த்தியாகவும் உணர்வுபூர்வமாகவும் ஆடப்படும் சாபின் நடனத்தில் ‘கம்பஸ்’ (குட்டையான கழுத்துடைய யாழ்), ‘அக்கார்டியன்’, ‘ரெபானா’ (பாரம்பரிய முரசு) போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் இடம்பெறும் அசைவுகள் இயற்கையையும் விலங்குகளின் இயக்கங்களையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. பழ வௌவால் (keluang), மரத்தண்டு (batang), சுழல் (pusau) போன்ற இயற்கை அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட அசைவுகள் இதில் அடங்கும்.

சிங்கப்பூரின் தனித்துவமிக்க உள்ளூர் சாபின் வடிவங்கள்

சிங்கப்பூரில் சாபின் கலையின் பல்வேறு உட்பிரிவுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் சில, உள்ளூர் இடங்களின் வரலாற்றையும் மக்களின் வாழ்வியலையும் பறைசாற்றுபவையாக விளங்குகின்றன.

உதாரணமாக, உள்ளூர் கலைப் படைப்பான ‘சாபின் தெலுக் பிளாங்கா’ (Zapin Telok Blangah), திரு சுபீர் அப்துல்லாவின் இசை அமைப்பில் திருவாட்டி சோம் சையதால் வடிவமைக்கப்பட்டது. இது, தெலுக் பிளாங்காவின் துறைமுக வரலாற்றை நடன அசைவுகள்வழி அழகுற விவரிக்கிறது.

அதேபோன்று, ‘சாபின் சுங்கை காலாங்’ நடனம், 1970களில் காலாங் ஆற்றோரப் பகுதியில் அமைந்திருந்த தம் இல்லத்தின் நினைவாகவும் அங்கு வாழ்ந்த சமூகத்தின் நினைவாகவும் திரு ஒஸ்மான் அப்துல் ஹமிதால் உருவாக்கப்பட்டது.

இக்கலையைப் பாதுகாப்பதில் ‘ஸ்ரீ வாரிசான் சோம் சாயித் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்’ நிறுவனர் சோம் சாயித், ‘எரா டான்ஸ் தியேட்டர்’ நிறுவனர் ஒஸ்மான் அப்துல் ஹமீத் ஆகியோரின் பங்கு அளப்பரியது. இவர்களின் சேவையைப் பாராட்டி முறையே 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் ‘தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமையின் பாதுகாவலர்’ விருது வழங்கப்பட்டது.

“திரைப்படங்கள் வாயிலாக மலாய் நடனத்தைப் பார்த்து வளர்ந்த எனக்கு, சாபின் நடனத்தின் வரலாறு, தத்துவம், அடிப்படைகள் தெரியவந்தன. என் மனத்திற்கு மிகவும் நெருக்கமான இந்நடனம் இந்த யுனெஸ்கோ முன்மொழிவு மூலம் சாபின் கலை உலக மேடையில் மேலும் அங்கீகாரம் பெறும் என நம்புகிறேன்,” என்றார் திருவாட்டி சோம்.

சாபின் என்பது நமது சமூகத்தின் வரலாறு, மதிப்புகளைத் தாங்கி நிற்கும் வாழும் மரபுடைமை என்ற திரு ஒஸ்மான், இளைய நடனக் கலைஞர்கள் இதன் பண்பாட்டுப் பொருளை ஆழமாக ஆராய்ந்து, இக்கலையை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்ல இம்முயற்சி ஊக்கமளிக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார்.

பல்லாண்டுகால வட்டார ஒத்துழைப்பின் வெளிப்பாடே இந்தப் பரிந்துரை. வட்டாரக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பங்கேற்ற முந்தைய ‘சாபின் டி முவாரா’, சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘முவாரா’ விழாவாக உருவெடுத்து சாபின் கலையின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றுகிறது.

யுனெஸ்கோ மதிப்பீட்டிற்காக கலைத்துறையினர், கல்வியாளர்கள், மாணவர்களுடன் தேசிய மரபுடைமைக் கழகம் கலந்துரையாடல்களை விரைவில் நடத்தவுள்ளது. அத்துடன், இக்கலைமீதான விழிப்புணர்வையும் பொதுமக்களின் பங்கேற்பையும் ஊக்குவிக்க பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.