📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 09, 2026 02:03 PM

“புவனேஷ்வரை தேர்வு செய்தது ஏன்?”

“புவனேஷ்வரை தேர்வு செய்தது ஏன்?”

மும்பை: ‘இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் புவனேஷ்வர் குமாரை தேர்வு செய்தது ஏன்?’ என்பது குறித்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் விளக்கம் அளித்துள்ளார்.

36 வயதான புவனேஷ்வர் குமார், இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். எதிர்வரும் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 கிரிக்கெட் அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். கடைசியாக கடந்த 2022 நவம்பரில் இந்திய அணிக்காக அவர் விளையாடி இருந்தார். இந்நிலையில், இந்திய அணிக்கு அவர் மீண்டும் திரும்பியுள்ளது கவனம் பெற்றுள்ளது. அது ஏன் என்பது குறித்து சிதான்ஷு கோட்டக் பேசியுள்ளார்.

“இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பும்ரா இல்லாத சூழலில் இளம் வீரர்கள் அதிகம் விளையாடினர். இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்ற காரணத்தால் தான் அணியில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இருப்பினும் சில நேரங்களில் அனுபவம் என்பது மிகவும் முக்கியம் என்று நான் கருதினேன். அதனால் அவரது தேர்வுக்கு அதுவொரு காரணமாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

இதோடு கடந்த இரண்டு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் புவனேஷ்வர் குமார் மிக சிறப்பாக செயல்பட்டிருந்தார். நியூஸிலாந்து ஆடுகள சூழலில் அவரது அனுபவம் அவசியம் என்று அணியின் தேர்வுக்குழுவினர் கருதியிருக்கலாம். அவரும் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் செயல்பட்டார். இப்போது அணியில் இடம்பெற்றுள்ளார்” என்று சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025 மற்றும் 2026 ஐபிஎல் சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 45 விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 22-ம் தேதி இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் டி20 தொடர் தொடங்குகிறது.