ஆஸ்கர் ரேஸில் இளையராஜா.. மொத்தம் இரண்டு படங்கள்.. விருதை தட்டி தூக்குவாரா இசைஞானி?
சென்னை: இளையராஜாவுக்கு வயது இப்போது 83. இந்த வயதிலும் பரபரப்பாக இசையமைத்துவருகிறார். தமிழில் அடுத்ததாக டோரதி, லெனின் பாண்டியன் படங்கள் வரவிருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க அவர் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இரண்டு படங்கள் ஆஸ்கர் ரேஸில் போட்டிப்போடுகின்றன. அவர் விருது வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் எழுந்திருக்கிறது.
இளையராஜா என்றாலே அறிமுகம் தேவையில்லை. அவரது செயல்பாடுகளை பார்க்கையில் ராஜாவுக்கு வயது ஆகுமா ஆகாதா என்ற கேள்விதான் எல்லோரிடமும் எழும். இப்போதிருக்கும் இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் இசையை கொடுக்கும் அவர்; இளம் இசையமைப்பாளர்களுக்கும் டஃப் கொடுக்கிறார். கடைசியாக அவர் இசையமைத்த ஜமா, விடுதலை 2 ஆகிய படங்களின் இசையும் வழக்கம்போல் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக லெனின் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்: மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் டோரதி படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அடிப்படையில் கார்த்திக் சுப்புராஜ் இளையராஜாவின் தீவிரமான ரசிகர் ஆவார். எனவே தன்னுடைய படத்தில் மிகச்சிறந்த இசையை ஞானியிடமிருந்து பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்தக் காலத்துக்கு தகுந்தபடி அவரால் இசையை கொடுக்க முடியுமா என்ற கேள்வியும் இருந்தது.
மெர்சல் செய்த இளையராஜா: எப்போதுமே தான் ஒரு ராஜாதான் என்பதை டோரதி பாடல்கள் மூலம் நிரூபித்துவிட்டார் இசைஞானி. கல்யாண விருந்து, முத்துமணிச்சரம் ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு வெவ்வேறு உணர்வுகளை கடத்தின. இனி பல வருடங்களுக்கு தமிழ்நாட்டில் திருமண வீடுகளில் கல்யாண விருந்துதான் ஒலிக்கும் என்பது உறுதி. அதன்படிதான் இப்போதும் நடந்துகொண்டிருக்கின்றன.
பின்னால் வந்த ரஹ்மான் வாங்கிட்டாரு: இளையராஜா சிம்பொனி முடித்துவிட்டார், 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துவிட்டார், தேசிய விருதுகளையும் வென்றுவிட்டார். இருப்பினும், சர்வதேச அளவில் விருது வாங்காமல் இருக்கிறார். அதேசமயம் அவருக்கு பின்னால் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர், கிராமி, கோல்டன் குளோப் விருதுகளை எல்லாம் வாங்கிவிட்டார். எனவே ராஜா வாங்குவாரா மாட்டாரா என்ற கேள்வி அவரது ரசிகர்களிடம் பல காலம் இருந்தது.
ஆஸ்கர் ரேஸில் ராஜா: இந்நிலையில் அவர்களது ஆவலை தூண்டும் வகையில் ஒரு விஷயம் நடந்திருக்கிறது. அதாவது 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதின் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இந்தியாவிலிருந்து மராத்தி திரைப்படமான கோந்தல் படம் தேர்வாகியிருக்கிறது. அதேபோல் இலங்கை நாட்டிலிருந்து அந்தோனி படமும் தேர்வாகியிருக்கிறது. இவ்விரண்டு படங்களுக்கும் இளையராஜாதான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களில் ஒன்றாவது ராஜாவுக்கு ஆஸ்கரை பெற்றுக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.