📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news August 27, 2026 07:00 PM

ஆன்மிக தமிழ் சொற்பொழிவாளர் தலைமையில் 150 பேர் நேபாள எல்லையில் சிக்கித் தவிப்பு

ஆன்மிக தமிழ் சொற்பொழிவாளர் தலைமையில் 150 பேர் நேபாள எல்லையில் சிக்கித் தவிப்பு

காத்மாண்டு,

ஆன்மிக தமிழ் சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தலைமையில் 150 பேர் நேபாள எல்லையான சாகாவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

நேபாள பெரு வெள்ளம்

நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தலைமையில் மானசரோவருக்கு திருக்கயிலாய யாத்திரை சென்ற 150 பேர் சாகாவில் சிக்கித் தவிக்கின்றனர். இது தொடர்பாக, ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது:-

“மானசரோவர் யாத்திரைக்கு 2 குழுக்களாக ஆகஸ்டு 17, 18 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டோம். காத்மண்டு வந்தடைந்த பிறகு, 20-ந் தேதி சாகா எல்லையை தாண்டி, முறையாக எங்கு தங்க வேண்டுமோ அங்கு தங்கி, கயிலாய யாத்திரையை சரியாக நடத்திக் கொண்டிருந்தோம்.

தற்போது, 2-வது நாள் யாத்திரையை நிறைவு செய்யும்போதுதான் நேபாளத்தில் நடைபெற்ற பேரிடர் துயரச் சம்பவத்தை கேள்விப்பட்டோம். மிகுந்த மனவேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானோம்.

150 பேர் பயணம்

பல்லாயிரக்கணக்கான நேபாள மக்களும், நூற்றுக்கணக்கான யாத்திரிகளும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும், தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களும், இதில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

பல பேருடைய நிலைமை என்ன என்பதே இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. நாங்கள் 150 பேர் பயணத்தில் இருக்கிறோம். 148 தமிழர்களும், 2 வெளிநாட்டினரும் உள்ளனர். நாங்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக சாகா எனும் இடத்தில் உள்ளோம்.

3 நாட்டு அரசுடன் பேச்சு

இங்கிருந்து நாங்கள் வெளியேற என்ன வழி என்பது குறித்து நேபாள, சீன, இந்திய அரசாங்கத்துடன் பேசிவருகிறோம். எந்த வழியாக எங்களுக்கு அனுமதி கொடுக்கிறார்களோ, அந்த வழியாக நாங்கள் நாடு திரும்புவோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.