45 ரன்களில் ஆல் அவுட்.. செமி பைனலில் இலங்கையை நசுக்கிய இந்தியா.. ஆசிய விளையாட்டு பைனலுக்கு தேர்வு
45 ரன்களில் ஆல் அவுட்.. செமி பைனலில் இலங்கையை நசுக்கிய இந்தியா.. ஆசிய விளையாட்டு பைனலுக்கு தேர்வு
நிஷின்: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டின் 2வது அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது. இஷான் கிஷனின் அதிரடி அரைசதம் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா, அக்ஷர் படேலின் அசுர பந்துவீச்சால் இலங்கை அணி வெறும் 45 ரன்களுக்கு சுருண்டது.
ஜப்பானின் நிஷின் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 7 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி 21 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 38 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 13 ரன்களும், திலக் வர்மா 2 ரன்களும், சிவம் துபே 3 ரன்களும் எடுத்து வரிசையாக வெளியேறினர்.
ஆனால் 5வது வரிசையில் களமிறங்கிய இஷான் கிஷன் தனி ஆளாக நின்று இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 46 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 80 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்றார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே மரண அடி விழுந்தது. முதல் ஓவரிலேயே ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்து ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய இலங்கை பேட்டர்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்தனர். இலங்கை அணியில் 6 வீரர்கள் பூஜ்ஜிய ரன்களில் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
நுவனிது பெர்னாண்டோ அடித்த 15 ரன்களே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. பவர்பிளேயில் 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, முடிவில் 9.5 ஓவர்களிலேயே வெறும் 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
இந்திய அணி தரப்பில் துல்லியமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அக்சர் படேல் 3 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 8 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 5 பந்துகளில் 2 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். மேலும் இந்திய வீரர்கள் பீல்டிங்கில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு 3 ரன் அவுட்களை செய்தனர். 124 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி, ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தானுடன் ஆட உள்ளது.