📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 11, 2026 09:03 PM

1024 பந்துகளில் 2000 ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவின் உலக சாதனையை உடைத்த அபிஷேக் சர்மா

1024 பந்துகளில் 2000 ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவின் உலக சாதனையை உடைத்த அபிஷேக் சர்மா

1024 பந்துகளில் 2000 ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவின் உலக சாதனையை உடைத்த அபிஷேக் சர்மா

இந்தூர்: சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சூர்யகுமார் யாதவின் உலக சாதனையை முறியடித்து அபிஷேக் சர்மா புதிய சரித்திரம் படைத்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய அபிஷேக் சர்மா வழக்கம் போல வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

இந்தப் போட்டிக்கு முன்பாக 2000 ரன்களை எட்ட அவருக்கு 37 ரன்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில் களத்தில் உச்சகட்ட அதிரடி ஆட்டம் ஆடிய அவர் வெறும் 15 பந்துகளிலேயே அந்த ரன்களை விளாசித் தள்ளினார். இதன் மூலம் சர்வதேச டி20 அரங்கில் வெறும் 1024 பந்துகளை மட்டுமே சந்தித்து 2000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை தன்வசப்படுத்தினார்.

இதற்கு முன்பு முன்னாள் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1164 பந்துகளில் 2000 ரன்களை எட்டியதே உலக சாதனையாக இருந்தது. அந்த இமாலய சாதனையை அபிஷேக் சர்மா தற்போது உடைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 1283 பந்துகளிலும், கிளென் மேக்ஸ்வெல் 1304 பந்துகளிலும், ஹர்திக் பாண்டியா 1390 பந்துகளிலும் இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிக்சரும் பவுண்டரியுமாகப் பறக்கவிட்ட அபிஷேக் சர்மா, வெறும் 18 பந்துகளில் தனது மின்னல் வேக அரைசதத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து மிரட்டிய அவர் 30 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

2026-ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் தனது அதிகபட்ச ரன் குவிப்பைப் பதிவு செய்து தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த ஆண்டாக இதை மாற்றியுள்ளார். இவரது இந்த அதிரடி ஆட்டம் இந்தூர் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது.