யுபிஐ கட்டணம் வசூலித்தால் ரொக்கப் பணம் முறைக்கு மாறுவோம்: பெட்ரோல் பம்ப் டீலர்கள்
புதுடெல்லி: பெட்ரோல் பம்ப்புகளில் ரூ.2,000-க்கு மேல் எரிபொருள் நிரப்பப்படும்போது யுபிஐ கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுமானால், யுபிஐ மூலம் பணம் பெறுவதை நிறுத்திவிட்டு, ரொக்கப் பணத்துக்கு மாறுவோம் என்று பெட்ரோல் பம்ப் டீலர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
“அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை கட்டணம் (எம்டிஆர்) விதிக்கப்படும். இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும். சாதாரண நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் எப்போதும் போல இலவசமாகவே தொடரும்“ என்று என்பிசிஐ அறிவித்துள்ளது.
மேலும், ரயில்வே, தொலைத்தொடர்பு, பெட்ரோல் பங்க், காப்பீட்டு பிரீமியம் மற்றும் மின்சாரம் / நீர் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு (ரூ.2,000-க்கு மேல்) சதவீதத்துக்குப் பதிலாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 மட்டுமே நிலையான கட்டணமாக வசூலிக்கப்படும். என்றும் என்பிசிஐ தெரிவித்துள்ளது.
என்சிபிஐ-ன் இந்த அறிவிப்புக்கு பெட்ரோல் பம்ப் டீலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் மான்டி சேகல் கூறுகையில், “பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கு லிட்டருக்கு சுமார் ரூ.2.40 முதல் ரூ.3.40 வரையில்தான் லாப வரம்பு உள்ளது. இந்நிலையில், வணிகர் தள்ளுபடி வகிதம் (எம்டிஆர்) கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு யுபிஐக்கு பதில் ரொக்கப் பணத்துக்கு மாறுவோம்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகில கர்நாடக பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கும் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ‘பெட்ரோலிய சில்லறை விற்பனை நிலையங்களை மற்ற சில்லரை வணிகங்களுடன் ஒப்பிட முடியாது. பெட்ரோல் மற்றும் டீசலின் விற்பனை விலைகள் அந்தந்த எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஏற்பதால் செலவு அதிகரிக்கும்போது, அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கு ஒரு டீலருக்கு சுதந்திரம் கிடையாது. எனவே, இந்த அறிவிப்பில் இருந்து பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளது.
எம்பவரிங் பெட்ரோலியம் டீலர்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த டீலருமான ஹேமந்த் சிரோஹி கூறும்போது, “கிடைக்கக்கூடிய அதிகாரப்பூர்வ யுபிஐ பரிவர்த்தனை தரவுகளின்படி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ரூ.1,573 கோடி மதிப்பிலான 239 லட்சம் கட்டணச் செலுத்துதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகைய பரிவர்த்தனைகளில் சுமார் 20% பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு மேல் உள்ளன. இது ஒரு பெட்ரோல் நிலையத்துக்கு நாளொன்றுக்கு ரூ.230 முதல் ரூ.250 வரை கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும். டீலர்கள் மீது ஏற்கனவே சுமைகள் உள்ள நிலையில் இது அவர்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.