ஒரு யூனிட் 30 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கிய வாரியம்!
சென்னை: ஒரு யூனிட் மின்சாரத்தை, 25 ரூபாய் - 30 ரூபாய் விலைக்கு, மின் வாரியம் வாங்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரத்தில் தினசரி மின் தேவை சராசரியாக, 21,000 மெகா வாட்டாக இருந்தது. காற்றாலை மின்சாரம் குறைந்ததால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், 1,500 - 2,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டது.
பல மாநிலங்களிலும் மின் தேவை அதிகரித்துள்ளதால், மின்சார சந்தையில் விலை மிகவும் அதிகமாக இருந்தது. இதனால், மின் கொள்முதல் செய்ய, தமிழக மின் வாரிய அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.
மின் பற்றாக்குறையை சமாளிக்க, இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து, சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், ஒரு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது. இதனால், மக்கள் மற்றும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
பின், மின் பற்றாக்குறையை சமாளிக்க, கடந்த வார இறுதியில் இருந்து, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து, 2,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த மின்சாரத்தின் யூனிட் விலை, 20 ரூபாய்க்கு மேல் என, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று தெரிவித்தார்.
அதேசமயம், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை. மாலை, 6:00 மணி முதல் இரவு வரையிலான உச்ச நேரத்தில் வாங்கிய போது, 25 ரூபாய் - 30 ரூபாயாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய பணியாளர்கள் கூறியதாவது:
மின் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கியதற்கு, கடந்த ஆட்சிகளில் அதிகளவில், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததே முக்கிய காரணம். இந்த அரசு, வெளிப்படையான அரசு என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, மின் பற்றாக்குறையை சமாளிக்க, எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு மெகா வாட் மின்சாரம், என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்பதை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.