📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 19, 2026 07:33 AM

வருண் சக்கரவர்த்திக்கு மாற்று வீரர் இவரா? இந்திய அணியில் இடம் பிடிப்பது சுலபமாகிவிட்டதா?

வருண் சக்கரவர்த்திக்கு மாற்று வீரர் இவரா? இந்திய அணியில் இடம் பிடிப்பது சுலபமாகிவிட்டதா?

வருண் சக்கரவர்த்திக்கு மாற்று வீரர் இவரா? இந்திய அணியில் இடம் பிடிப்பது சுலபமாகிவிட்டதா? -ஸ்ரீகாந்த்

மும்பை: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆல்-ரவுண்டர் விப்ராஜ் நிகம் தேர்வு செய்யப்பட்டது குறித்து முன்னாள் கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். காயம் காரணமாக விலகிய வருண் சக்கரவர்த்திக்கு மாற்றாக 22 வயதான விப்ராஜ் நிகம் சமீபத்தில் அணியில் சேர்க்கப்பட்டார்.

கடந்த ஐபிஎல் 2026 தொடரில் விப்ராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் விளையாடிய ஐந்து போட்டிகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து, இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இருப்பினும், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான முத்தரப்புத் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினார்.

அந்தத் தொடரில் ஐந்து போட்டிகளில் பங்கேற்ற விப்ராஜ், 126-க்கு மேல் ஸ்டிரைக் ரேட்டுடன் 29 சராசரியில் ரன்கள் குவித்ததுடன், 5.38 எகானமியில் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். விப்ராஜ் நிகமின் இந்த தேர்வு குறித்து பேசிய ஸ்ரீகாந்த், "விப்ராஜ் நிகம் திடீரென எப்படி அணிக்குள் வந்தார்? எந்த அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

வருண் சக்கரவர்த்திக்கு இணையான மாற்று வீரராக தேர்வு செய்யப்பட இவர் அவ்வளவு சிறந்த பந்துவீச்சாளரா? இந்திய கேப்பை இதுபோன்று அனைவருக்கும் எளிதாகக் கொடுத்துவிட முடியாது. இப்போது கடைகளில் இந்திய கேப்பை விலைக்கு வாங்குவது போல் ஆகிவிட்டது." விப்ராஜ் தனது முதல் ஐபிஎல் சீசனான 2025-இல், 14 போட்டிகளில் விளையாடி 180 ஸ்டிரைக் ரேட்டில் 142 ரன்கள் எடுத்ததுடன், 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"ரஜத் படிதார், குருணால் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் வாழ்க்கையில் அப்படி என்ன தவறு செய்தார்கள்? இந்தத் தேர்வுகளில் சில மிகவும் குழப்பமாக உள்ளன. புவனேஷ்வர் குமார் மற்றும் குருணால் பாண்டியா விஷயத்தில் வயது மட்டுமே தகுதியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்க முடியாது. ஒரு வீரரின் திறமை மற்றும் செயல்பாடும் முக்கியம்" என்று கூறியுள்ளார்.

"இளம் வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் மூத்த வீரர்களை பின்னுக்குத் தள்ளி அணிக்குள் நுழைய வேண்டும். ஆனால் யஷ் தாக்கூர் அல்லது ரவி பிஷ்னோய் ஆகியோர் தங்களின் சிறப்பான ஆட்டத்தால் அதைச் செய்திருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை. இவர்கள் ஐபிஎல் அணிகளின் ஆடும் லெவனில் கூட இடம் பெற தகுதியற்றவர்கள்" என்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி தனது கால் இறுதிப் போட்டியுடன் செப்டம்பர் 28, திங்கட்கிழமை அன்று தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.