📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 18, 2026 06:33 PM

பிரபல ஐபிஎல் வீரருக்கு ஜாமீன்.. பாலியல் வழக்கில் 36 நாள் சிறைக்கு பிறகு விடுதலை

பிரபல ஐபிஎல் வீரருக்கு ஜாமீன்.. பாலியல் வழக்கில் 36 நாள் சிறைக்கு பிறகு விடுதலை

பிரபல ஐபிஎல் வீரருக்கு ஜாமீன்.. பாலியல் வழக்கில் 36 நாள் சிறைக்கு பிறகு விடுதலை

மும்பை: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான அபிஷேக் போரலுக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்த நிலையில் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு கொண்டது மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் அபிஷேக் போரல் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதால், வெள்ளிக்கிழமை அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், கடந்த ஆகஸ்ட் 11 அன்று அபிஷேக் போரல் கைது செய்யப்பட்டார். தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி போரல் உடலுறவு கொண்டதாகவும், தங்களின் நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து விடுவதாக மிரட்டி பிளாக்மெயில் செய்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியிருந்தார்.

மக்ரா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், போரல் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகள் 66E மற்றும் 72 உட்பட 19 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பிரிவுகளில் பெரும்பாலானவை ஜாமீனில் வெளிவர முடியாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சௌகத் பட்டாச்சார்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, போரல் கைது செய்யப்பட்ட விபரத்தை மக்ரா போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் சின்சுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, போரலிடம் இருந்த மொபைல் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைது செய்யப்படுவதற்கு முன்பு தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அபிஷேக் போரல் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக போரலின் நண்பர் ஒருவரையும் மற்றொரு பெண்ணையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை சின்சுரா நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதிலும், சிறை நடைமுறைகள் காரணமாக அவர் விடுதலையாக மேலும் ஒரு நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதன்படி, விஸ்வகர்மா பூஜை தினமான வெள்ளிக்கிழமை அவர் சிறையிலிருந்து வெளியில் வர வாய்ப்புள்ளது.