விராட் கோலி, ரோகித் சர்மா இல்லை என்றாலும், இந்திய அணியில் பிரச்சினை இருக்காது.. EX கோட்ச் தாக்கு
விராட் கோலி, ரோகித் சர்மா இல்லை என்றாலும், இந்திய அணியில் பிரச்சினை இருக்காது.. EX கோட்ச் தாக்கு
மும்பை: 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் இந்திய அணிக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "அது அந்த இரண்டு வீரர்களின் கைகளில்தான் உள்ளது. அவர்கள் தொடர்ந்து விளையாட விரும்புகிறார்களா? தங்களது உடற்தகுதியை அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியுமா? தேர்வுக்குழுவினரின் உத்தி என்ன? அவர்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறார்களா?
தற்போதைய வீரர்களுடன் சேர்த்து, அவர்கள் அணியில் இல்லாத பட்சத்தில், பலம் வாய்ந்த மாற்று வீரர் நம்மிடம் இருக்கிறாரா என்பதை எப்போதும் நாம் சிந்திக்க வேண்டும். இந்திய அணியின் பெஞ்ச் பலத்தை பார்க்கும்போது, விராட் அல்லது ரோஹித் அணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்தப் பிரச்சினையும் வராது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
"இந்த இருவரும் பல ஆண்டுகளாக விளையாடி வருகின்றனர், அவர்கள் எப்போதும் ஜாம்பவான்களாகவே கருதப்படுவார்கள். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஒரு தலைசிறந்த வீரராக திகழ்ந்துள்ளார். விராட்டை பொறுத்தவரை, அவரை பற்றி எவ்வளவு பேசினாலும் அது குறைவாகவே இருக்கும்" என்று புகழ்ந்தார்.
இதே உரையாடலின் போது, ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின்னரும் இந்திய அணியின் பந்துவீச்சு பலம் குறையாது என்று சந்தீப் பாட்டீல் குறிப்பிட்டார். இது குறித்து பேசிய அவர், "எங்களிடம் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய 3 அல்லது 4 பந்துவீச்சாளர்கள் உள்ளனர், அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
ஜஸ்பிரித் பும்ரா சென்ற பிறகு இந்திய பந்துவீச்சு முற்றிலும் முடங்கிவிடும் என்று கூற முடியாது. யாராவது ஒருவர் நிச்சயமாக உருவெடுப்பார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்திற்கு வி.வி.எஸ் லக்ஷ்மனுடன் சென்றிருந்தேன். அங்குள்ள வசதிகளைப் பார்க்கும்போது பிசிசிஐ மிகச் சிறந்த பணியைச் செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய வசதிகளுடன், இந்திய கிரிக்கெட் சிறந்த பந்துவீச்சாளர்களை மட்டுமல்ல, சிறந்த பேட்டர்களையும் தொடர்ந்து உருவாக்கும் என்பதில் நான் 100% உறுதியாக இருக்கிறேன்," என்றார்.
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை அன்று ஜப்பானுக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 போட்டியில் விளையாடவுள்ளது. அதன் பிறகு வரும் 27ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.