📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 20, 2026 03:04 PM

ஈசூனில் முதியவரை மோதி மரணம் விளைவித்த சைக்கிளோட்டி கைது

ஈசூனில் முதியவரை மோதி மரணம் விளைவித்த சைக்கிளோட்டி கைது

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) முற்பகல் 11.45 மணியளவில் ஈசூன் அவென்யு 5ல் உள்ள புளோக் 741 அருகில் சைக்கிளோட்டி பாதசாரியை மோதியதில் விபத்து நிகழ்ந்தது.

அதில் 74 வயது முதியவரை 16 வயது சைக்கிளோட்டி மோதியுள்ளார். கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த முதியவர், அங்கு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.

அந்த சைக்கிளோட்டி காவல்துறையால் விசாரணைக்கு உதவ கைது செய்யப்பட்டுள்ளார். ஏஷியா ஒன் ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்த அரசாங்க அமைப்புகள், குறிப்பிட்ட முகவரியில் உதவிகோரி அன்றையதினம் தொலைபேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்தன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் அங்கு இருநாள்கள் கழித்து மரணமடைந்ததை காவல்துறை உறுதிப்படுத்தியது.

விசாரணை தொடர்வதாகவும் பொறுப்பற்ற செயலால் மரணம் விளைவித்த குற்றத்துக்காக அந்த பதின்ம வயது சைக்கிளோட்டி கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

விபத்தை நேரடியாகப் பார்த்தோரை உதவும்படி அந்த முதியவரின் மகன் என்று அடையாளப்படுத்திக்கொண்ட டான் போ ஷு என்பவர் ஃபேஸ்புக்கில் சம்பவம் நடந்த மறுநாள் புதன்கிழமை பதிவிட்டார்.

ஈசூன் ஸ்திரீட் 11, அவென்யூ 5 சாலைச் சந்திப்பில் உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிலையத்தில் இயங்கும் ஜோலிபீ கடை அருகில் விபத்து நடந்ததை அவர் பதிவில் விவரித்தார்.

விபத்தினால் அவரது தந்தைக்குத் தலையின் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டு மூளையில் ரத்தம் கசியும் அளவு கடுமையாகக் காயம் அடைந்துவிட்டதை அவர் குறிப்பிட்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

விபத்தின்போது அவ்வழியே சென்ற வழிப்போக்கர், மருத்துவ வாகனத்தை அழைத்து உதவியதற்கு தமது நன்றியை திரு டான் தெரிவித்துக்கொண்டார்.