விராட் கோலி போன்ற ஒரு தனி வீரரால் இந்திய அணிக்கு உலககோப்பையை வென்று தர முடியாது.. கையிப் அட்வைஸ்
விராட் கோலி போன்ற ஒரு தனி வீரரால் இந்திய அணிக்கு உலககோப்பையை வென்று தர முடியாது.. கையிப் அட்வைஸ்
மும்பை: 2027-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமானால், விராட் கோலியை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் எச்சரித்துள்ளார்.
விராட் கோலி அணியின் நட்சத்திர வீரராக இருந்தாலும், உலகக்கோப்பையை வெல்வதற்கு பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் அனைவரின் கூட்டு முயற்சி அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி தொடர்ந்து ரன்களைக் குவித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது 55-வது ஒருநாள் சதத்தையும் பதிவு செய்தார்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன் போன்ற வீரர்களும், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் ரெட்டி ஆகிய ஆல்ரவுண்டர்களும் உள்ளனர். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற மாற்று வீரர்களும் கைவசம் உள்ளனர்.
பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும், இந்திய அணியின் பந்துவீச்சு வரிசையில் குறிப்பாக வேகப்பந்து வீச்சில் போதிய ஆழம் இல்லை என்ற கவலை எழுந்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே பந்துவீச்சில் உறுதியான இடத்தைப் பிடித்துள்ள ஒரே வீரராக உள்ளார். வெளிநாட்டில் உலகக்கோப்பையை வெல்ல ஒரு தனி நபரால் முடியாது என்றும், ரோஹித் மற்றும் கோலிக்கு மற்ற வீரர்களின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை என்றும் கைஃப் குறிப்பிட்டுள்ளார்.
தமது கருத்து உதாரணமாக 2003-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை கைஃப் சுட்டிக்காட்டினார். அத்தொடரில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் குவித்தபோதிலும், மற்ற வீரர்களின் கூட்டு முயற்சியாலேயே இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
அத்தொடரில் கேப்டன் சௌரவ் கங்குலி 465 ரன்களும், ராகுல் டிராவிட் 318 ரன்களும், வீரேந்தர் சேவாக் 299 ரன்களும் எடுத்தனர். யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் (நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் அரைசதம் என அனைவரும் முக்கியமான ரன்களைச் சேர்த்தனர்.
பந்துவீச்சில் ஜாகீர் கான் 18 விக்கெட்டுகளையும், ஜவாகல் ஸ்ரீநாத் 16 விக்கெட்டுகளையும், ஆஷிஷ் நெஹ்ரா 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு உதவினர். கங்குலியின் சிறப்பான கேப்டன்ஷியும் அணிக்கு பெரிய பலமாக இருந்தது.அதேபோன்றதொரு கூட்டு முயற்சியை 2027 உலகக்கோப்பையிலும் வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முடியும் என்று முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார்.