வெளிநாட்டில் இருந்துக் கொண்டே சொத்து வாங்கனுமா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு!
வெளிநாட்டில் இருந்துக் கொண்டே சொத்து வாங்கனுமா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு!
வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியாவில் சொத்து வாங்கப் போறீங்களா? பத்திரப்பதிவில் வந்துள்ள இந்த புதிய மாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய நிம்மதியாக இருக்கலாம்.
சொந்தமாக ஒரு வீடு... ஒரு சின்ன நிலம்... என்ற கனவு பலருக்கும் இருக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் இந்த ஆசை இருக்கத்தானே செய்யும். ஆனால், இந்தியாவில் சொத்து வாங்குவது அல்லது பத்திரப்பதிவு செய்வது என்றால், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சில கூடுதல் நடைமுறைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் 'லைப் சர்டிபிகேட்'.
வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர், தனது சார்பில் இந்தியாவில் சொத்து தொடர்பான பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மற்றொருவருக்கு பவர் ஆஃப் அட்டார்னி கொடுக்கும்போது, அந்த அதிகாரத்தை வழங்கியவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்யும் லைப் சர்டிபிகேட்டும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த சான்றிதழை சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அல்லது துணைத் தூதரகம், அல்லது அங்கீகரிக்கப்பட்ட நோட்டரி பப்ளிக் முன்னிலையில் பெற்று சான்றொப்பம் பெற வேண்டும்.
30 நாள்... போதவில்லை!
இதில் தான் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சிக்கல். லைப் சர்டிபிகேட் பெறுவதற்கு தூதரகம் அல்லது நோட்டரி அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அங்கு நேரம் கிடைத்து சான்றிதழ் பெற்ற பிறகு, அதை தபால், கூரியர் அல்லது தனிநபர் மூலமாக இந்தியாவில் உள்ள முகவருக்கு அனுப்ப வேண்டும்.
இந்த நடைமுறைகள் அனைத்தையும் முடிப்பதற்குள் 30 நாட்களைக் கடந்து விடுவதாக பொதுமக்கள் தரப்பில் பதிவுத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனால், பத்திரப்பதிவு நடவடிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் சிரமங்களை சந்தித்து வந்தனர்.
இனி 60 நாட்கள்!
இந்த கோரிக்கைகளை பரிசீலித்த பதிவுத்துறை தற்போது முக்கியமான மாற்றத்தை செய்துள்ளது. லைப் சர்டிபிகேட் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் பிறப்பித்துள்ளார்.
இதனால் வெளிநாட்டில் வசிப்பவர்கள், இந்திய தூதரகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நோட்டரி மூலம் உயிர் வாழ் சான்றிதழைப் பெற்று, அதை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.
அதாவது, முன்பு 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டியிருந்த இந்த நடைமுறை, இனி 60 நாட்களுக்குள் மேற்கொள்ள முடியும். வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டு, முறையாக அங்கீகரிக்கப்பட்ட பவர் ஆஃப் அட்டார்னியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட பத்திரப்பதிவு நடவடிக்கைகளுக்கே இந்த மாற்றம் பொருந்தும் என்றும் பதிவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியாவில் சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு, பதிவுத்துறையின் இந்த புதிய உத்தரவு நிச்சயம் ஒரு நிம்மதி.