📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 01, 2026 04:03 AM

“உயர் கல்வி நிறுவனங்கள் ‘சமூக அநீதி’ கூடாரமாக மாறியது நிரூபணம்”

“உயர் கல்வி நிறுவனங்கள் ‘சமூக அநீதி’ கூடாரமாக மாறியது நிரூபணம்”

மாணிக்கம் தாகூர் | கோப்புப் படம்

சென்னை: “மாணவர்களின் உயிரை விட தனது கூட்டாளிகளின் வணிக நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும் பாஜக அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புவோம்” என்று தமிழ காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பணிக் குழுவின் (NTF) இடைக்கால அறிக்கை வெளிக்கொணர்ந்துள்ள உண்மைகள், மோடி ஆட்சியில் நமது நாட்டின் உயர் கல்வித் துறை எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதற்கான பகிரங்க சான்றாகும்.

நாடு முழுவதிலும் உள்ள 2.43 லட்சம் மாணவர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், 9% மாணவர்கள் தற்கொலை எண்ணங்களை எதிர்கொள்வதாகவும், 15% மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் தவிப்பதாகவும், 34% மாணவர்கள் வளாகத்துக்குள் வேற்று ஆட்களாக ஓரங்கட்டப்படுவதாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 67% பேர் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த அடித்தட்டு மாணவர்கள். 32% கல்லூரிகளில் அடிப்படை கவுன்சிலிங் வசதி கூட இல்லை.

பாஜக ஆட்சியில் உயர் கல்வி மாணவர்களின் தற்கொலை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 30.02 ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை 61%-க்கும் மேல் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், 2018 முதல் 2023 வரை ஐஐடி, ஐஐஎம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலிருந்து மட்டும் 13,600-க்கும் மேற்பட்ட பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் நீட் (NEET), ஜேஇஇ நுழைவுத் தேர்வு ரேங்க்களைக் காட்டி நடக்கும் சாதிய ஒடுக்குமுறைகளும், பாலியல் சீண்டல்களும் மாணவர்களை தற்கொலை விளிம்புக்குத் தள்ளுகின்றன.

மாணவர்களின் எதிர்காலத்தை வளர்ப்பதிலோ, அவர்களின் உயிரைப் பாதுகாப்பதிலோ மோடி அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. மாறாக, கல்வித் துறையைத் தனியார்மயமாக்கி தனது கார்ப்பரேட் நண்பர்கள் மற்றும் வணிகக் கூட்டாளிகள் கல்லாகட்ட வழிவகை செய்வதிலேயே முழு முனைப்புடன் செயல்படுகிறது.

நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களை சமூக அநீதியும் பாகுபாடும் நிறைந்த கூடாரங்களாக மாற்றி, இளம் தலைமுறையினரின் வாழ்க்கையைப் பாதுகாப்பதில் மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. இதைத்தான் நம் தலைவர் ராகுல் காந்தி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இன்று இந்த உச்ச நீதிமன்ற அறிக்கை மூலம் அது அப்பட்டமாக நிரூபணமாகியுள்ளது.

மாணவர்களுக்குத் தேவை தரமான கல்வியே தவிர மன அழுத்தம் அல்ல. அவர்களுக்குத் தேவை வே லைவாய்ப்புகளே தவிர, சுமை அல்ல. மாணவர்களின் உயிரை விட தனது கூட்டாளிகளின் வணிக நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும் பாஜக அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புவோம்!” என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.