📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 01, 2026 03:03 AM

மாணவர் தற்கொலை 61 சதவீதமாக உயர்வு உயர்கல்வி துறையை இருளில் தள்ளிய ஒன்றிய பாஜ அரசு: மாணிக்கம் தாகூர் கண்டனம்

மாணவர் தற்கொலை 61 சதவீதமாக உயர்வு உயர்கல்வி துறையை இருளில் தள்ளிய ஒன்றிய பாஜ அரசு: மாணிக்கம் தாகூர் கண்டனம்

மாணவர் தற்கொலை 61 சதவீதமாக உயர்வு உயர்கல்வி துறையை இருளில் தள்ளிய ஒன்றிய பாஜ அரசு: மாணிக்கம் தாகூர் கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேசிய பணிக்குழு சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கை, மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் நாட்டின் உயர்கல்வித் துறை எத்தகைய இருண்ட படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது என்பதற்கான பகிரங்க சான்றாக அமைந்துள்ளது.

உயர்கல்வி வளாகங்களில் பயிலும் மாணவர்களின் மனநலம் மற்றும் தொடரும் தற்கொலைகள் குறித்து நாடெங்கிலும் உள்ள 2.43 லட்சம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வில், அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன. ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 9 சதவீதம் பேர் தற்கொலை எண்ணங்களை எதிர்கொள்வதாகவும், 15 சதவீதம் பேர் கடுமையான மன உளைச்சல் மற்றும் பதற்றத்தில் தவிப்பதாகவும், 34 சதவீதம் பேர் கல்வி வளாகங்களுக்குள் வேற்று நபர்களாகப் புறக்கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களில் 67 சதவீதம் பேர் பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த எளிய குடும்பத்துப் பிள்ளைகள் ஆவர். இத்தகைய தீவிர மன அழுத்தச் சூழலிலும், நாட்டின் 32 சதவீத உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழிகாட்ட அடிப்படை மனநல ஆலோசனைக் கட்டமைப்புகளே இல்லை என்பது நிர்வாகங்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது. மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை 61 சதவீதத்திற்கும் மேல் அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது.

2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்ற நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து மட்டும் 13,600க்கும் மேற்பட்ட எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மாணவர்கள் பாதியிலேயே வெளியேற்றப்பட்டுள்ளனர். கல்வித்துறையைத் தனது கார்ப்பரேட் வணிகக் கூட்டாளிகள் கல்லாகட்டுவதற்கான ஒரு வணிகக் களமாக மாற்றி, அவர்களுக்கு லாபம் ஈட்டித் தருவதிலேயே இந்த அரசு முழு முனைப்புடன் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.