துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ரேஷன் துவரம் பருப்பு கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.31.26 குறைந்ததால், 3 மாதங்களில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.187.56 கோடி சேமிப்பு
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பை, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தைவிட குறைந்த விலையில் TVK அரசு கொள்முதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.77.89 ஆக உள்ள நிலையில், முந்தைய ஆட்சியில் கிலோ ரூ.109.15-க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.31.26 குறைந்துள்ளதுடன், கடந்த 3 மாதங்களில் மட்டும் அரசுக்கு ரூ.187.56 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
60 ஆயிரம் டன் கொள்முதல்
TNCSC சார்பில் ஒவ்வொரு மாதமும் சுமார் 20 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ரேஷன் விநியோகத்துக்காக கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ரூ.467.34 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதே அளவை முந்தைய திமுக ஆட்சியில் கொள்முதல் செய்ய ரூ.654.90 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலை அடுத்த 9 மாதங்களுக்கும் தொடர்ந்தால், ஆண்டுக்கு சுமார் ரூ.750 கோடி வரை அரசுக்கு சேமிப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதைய கொள்முதல் விலை குறித்து TNCSC நிர்வாக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, டெண்டர் நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும், முந்தைய விலையைவிட ரூ.31.26 குறைவாக துவரம் பருப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
29% குறைந்த கொள்முதல் விலை
சர்வதேச சந்தை மற்றும் உள்நாட்டு சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டால் துவரம் பருப்பின் கொள்முதல் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய டெண்டரில் முந்தைய விலையைவிட 29 சதவீதம் குறைந்துள்ளதாக TNCSC தரப்பு தெரிவித்துள்ளது.
முந்தைய டெண்டர் மே 2-ம் தேதி இறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அந்த டெண்டரில் கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பு ஆகஸ்ட் இறுதி வரை விநியோகிக்கப்பட்டது.
தற்போது 6 ஒப்பந்ததாரர்களுக்கு பணியாணைகள் வழங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் முதல் விநியோகிக்கப்படும் துவரம் பருப்பை அவர்கள் சராசரியாக கிலோ ரூ.77.89-க்கு கொள்முதல் செய்துள்ளனர். மாநிலத்தில் சுமார் 2.15 கோடி ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில், 88% அட்டைதாரர்கள் துவரம் பருப்பை வாங்குகின்றனர். இவர்களில் 86% பேர் கிலோ ரூ.30 என்ற மானிய விலையில் துவரம் பருப்பை பெறுகின்றனர். தற்போதைய கொள்முதல் விலை மற்றும் ரூ.30 விற்பனை விலைக்கு இடையிலான வித்தியாசத்தை அரசு மானியமாக ஏற்கிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி