தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்.. 4x400 மீ மகளிர் அணி அபாரம்.. தமிழ்நாட்டின் வித்யா 3 பதக்கம்
தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்.. 4x400 மீ மகளிர் அணி அபாரம்.. தமிழ்நாட்டின் வித்யா 3 பதக்கம்
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளத்தில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மகளிர் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அசாத்திய வேகத்தில் ஓடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர். தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் இந்த தொடரில் தனது 3வது பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
மகளிர் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 6வது லேனில் இருந்து களமிறங்கியது. இந்தியாவின் சார்பில் கிரண் பஹால், எம்.ஆர்.பூவம்மா, பிராச்சி மற்றும் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் ஆகியோர் சீறிப்பாய்ந்து ஓடினர். 4 வீராங்கனைகளும் கூட்டு முயற்சியுடன் அற்புதமாக ஓடி பந்தய தூரத்தை வெறும் 3:29.69 நிமிடங்களில் கடந்து முதலிடத்தைப் பிடித்தனர்.
பலம் வாய்ந்த பஹ்ரைன் மற்றும் சீன அணிகளை பின்னுக்குத் தள்ளி இந்திய மகளிர் அணி கம்பீரமாக தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள அணி வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
கடந்த 1982 முதல் சுமார் 44 ஆண்டுகளாக 4 x 400 மீட்டர் மகளிர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் இந்தியா பதக்கம் வென்று வருகிறது. கடந்த 2018இல் இந்தியா இந்த விளையாட்டில் தங்கம் வென்று இருந்தது. தற்போது மீண்டும் இந்தியா தங்கம் வென்று இருக்கிறது.
இந்த வரலாற்று தங்கத்தின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது 3வது பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளியும், மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனையுடன் வெண்கலமும் வென்றிருந்தார். தற்போது மகளிர் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் வென்று, ஒரே ஆசிய தொடரில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் குவித்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் மாபெரும் பெருமை சேர்த்துள்ளார்.
அனுபவ வீராங்கனை பூவம்மா, கிரண், பிராச்சி மற்றும் வித்யா ராம்ராஜ் ஆகிய நால்வரின் இந்த தங்க சாதனைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.