புதிய தேசிய சாதனையுடன் வெண்கலம் வென்ற இந்திய கலப்பு 4x100 மீ அணி.. ஆசிய விளையாட்டில் அபாரம்
புதிய தேசிய சாதனையுடன் வெண்கலம் வென்ற இந்திய கலப்பு 4x100 மீ அணி.. ஆசிய விளையாட்டில் அபாரம்
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளத்தில் 4 x 100 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி புதிய தேசிய சாதனை படைத்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது. பரபரப்பாக நடைபெற்ற 4 x 100 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் குரிந்தர்வீர் சிங், சினேகா சத்யநாராயணா, அனிமேஷ் குஜூர் மற்றும் ஹரிதா பத்ரா ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்க வீரராக களமிறங்கிய குரிந்தர்வீர் சிங் மின்னல் வேகத்தில் ஓடி இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தார். 2வது சுற்றில் சினேகாவும், 3வது சுற்றில் அனிமேஷ் குஜூரும் இலக்கை நோக்கி புயல் வேகத்தில் முன்னேறினர்.
கடைசி சுற்றில் பேட்டனை வாங்கிய ஹரிதா பத்ரா அபாரமாக ஓடி பந்தய தூரத்தை முடித்து இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். 0.28 வினாடியில் தங்கம் நழுவியது இந்திய அணி பந்தய தூரத்தை வெறும் 41.06 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையை பதிவு செய்து 3வது இடத்தை பிடித்தது.
சீன அணி 40.78 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தையும், தாய்லாந்து அணி 40.87 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன. தங்கப் பதக்கம் வென்ற அணியை விட வெறும் 0.28 வினாடிகள் மட்டுமே பின்தங்கி இந்திய அணி இந்த வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.