தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியல் வருகையை வரவேற்கும் பா.ஜ.,
புதுடில்லி: தமிழக சட்டசபை இடைத்தேர்தலில், த.வெ.க., வெற்றி பெற்று, திராவிட கழகங்களை குறிப்பாக அ.தி.மு.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டது. இந்த தேர்தல் முடிவுகள், டில்லி அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. பிரபல நடிகராக இருந்து, கட்சி துவங்கிய இரண்டே ஆண்டில் விஜய் ஆட்சியை பிடித்தது, டில்லி அரசியல் வட்டாரங்களை ஏற்கனவே பிரமிக்க வைத்து விட்டது.
தமிழகத்தில் சினிமாவும், அரசியலும் இரண்டற கலந்துள்ளதை தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.,வும் வரவேற்கின்றன. இரண்டு திராவிட கட்சிகளையும் பின்னுக்கு தள்ள, சினிமா தான் உதவும் என்பதையும் டில்லி தலைவர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வர ஆசைப்படுவதுடன், அதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளனர். இதை, பா.ஜ.,வின் டில்லி தலைவர்கள் வரவேற்கின்றனராம்.
இதற்கிடையே, தி.மு.க., - எம்.பி., ஒருவர், தேசிய கட்சிகளில் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுக்கு, 'வாட்ஸாப்'பில் தகவல் அனுப்புகிறாராம். அதில், 'சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னை துவங்கி விட்டது. இனி, நடிகர்கள் தான் தமிழகத்தை ஆட்சி நடத்துவர்' என, கூறி இருக்கிறாராம்.