தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற ரூ.100 கோடி மோசடி புகார்: பள்ளிக்கல்வி இணை இயக்குநரிடம் விசாரணை
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி புகார் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநரிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
தமிழகத்தில் 2021-26-ல் நடைபெற்ற திமுக ஆட்சியின்போது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயர்வு, டிடிசிபி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி நடைபெற்றதாக, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் தலைவராக இருந்த திமுக பிரமுகரான பி.டி.அரசகுமார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கடந்த ஜூன் 27-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மேலும் 2 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
அன்பில் மகேஸின் உதவியாளர்
இதன் தொடர்ச்சியாக அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்தினர்.
இதையடுத்து, அவரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அன்பில் மகேஸின் முன்னாள் சிறப்பு உதவியாளராக இருந்த பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் அருள் முருகனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.
வாக்குமூலம் பதிவு
சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த அனைத்து தகவல்களையும் போலீஸார் வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளனர். மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு வர வேண்டும் என கூறி அனுப்பி வைத்தனர்.