தமிழ்ப் பேச்சாளர் மன்றங்களின் மைல்கல் கொண்டாட்டம்
நற்பணித் தமிழ்ப் பேச்சாளர் மன்றமும் சிங்கப்பூர்த் தமிழ் சொல்வேந்தர் மன்றமும் தங்கள் மைல்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டுத் தமிழ் முரசுடன் இணைந்து நிகழ்ச்சியொன்றை நடத்தவிருக்கின்றன.
தமிழைத் தன்னம்பிக்கையோடு பேசுவதும் பயன்படுத்துவதும் சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துவதும் இதன் நோக்கம்.
நற்பணித் தமிழ்ப் பேச்சாளர் மன்றம், 20ஆம் ஆண்டுநிறைவையும் சிங்கப்பூர்த் தமிழ் சொல்வேந்தர் மன்றம், 25ஆம் ஆண்டுநிறைவையும் கொண்டாடுகின்றன.
நிகழ்ச்சி, எண் 9, கிங் ஜார்ஜ்’ஸ் அவென்யூவில் உள்ள மக்கள் கழகத் தலைமையகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அங்கமாகப் பட்டிமன்றம் இடம்பெறவிருக்கிறது. இதில் நற்பணித் தமிழ் பேச்சாளர் மன்றத்தின் திரு பிரம்மகுமார் பாலகிருஷ்ணன், திரு சங்கரசுப்பிரமணியன், குமாரி காமாட்சி சந்திரசேகர், திரு செந்தில் ஆண்டியப்பன் ஆகியோரும் சிங்கப்பூர்த் தமிழ் சொல்வேந்தர் மன்றத்தின் திரு மு.கி.தாமரைச்செல்வன், திருமதி சரஸ்வதி சுப்ரமணியம், திரு ரா.ராம்குமார், திரு பு.பா.தண்டபாணி ஆகியோரும் பேச்சாற்றலை வெளிப்படுத்தவிருக்கின்றனர். பட்டிமன்றத்திற்குத் தமிழ் முரசின் மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா. முத்து நடராஜன் நடுவராக இருப்பார்.
வேறு பல அங்கங்களும் நிகழ்ச்சியில் இடம்பெறும். தமிழ்ச் சொற்சங்கிலி, தமிழ் ஒலிச்சேர்க்கை, பழமொழிக் கதைத்தொடர், தமிழ் நாப்புரட்டுச் சவால், தலைப்புக் கொடுத்து உடனே பேசும் போட்டி முதலியவை அவற்றுள் அடங்கும். இவற்றை இளையர் முன்னெடுத்து நடத்தவிருக்கின்றனர். தமிழ் விருந்துக்குப் பிறகு சுவையான மதிய உணவும் உண்டு.
கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சரும் நற்பணிப் பேரவையின் ஆலோசகருமான டாக்டர் ஜனில் புதுச்சேரி, நாடாளுமன்ற உறுப்பினரும் செம்பவாங் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திரு விக்ரம் நாயர், நாடாளுமன்ற உறுப்பினரும் வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான டாக்டர் ஹமீத் ரசாக் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
நிகழ்ச்சி பற்றி மேல்விவரம் அறிய விரும்புவோர் திருமதி கலா கல்யாணசுந்தரத்தைத் தொடர்புகொள்ளலாம். கைத்தொலைபேசி எண்: 9021 4774.