‘டேப்ஸ்’ இடைக்கால நிவாரணம் ரூ.10 ஆயிரமாக நிர்ணயம்: அரசு ஊழியர்
கோப்புப் படம்
சென்னை: தமிழக அரசுப்பணியில் 10 முதல் 18 ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் (டேப்ஸ்) இடைக்கால நிவாரணத்தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்குரிய டிஏ என நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடந்த ஜன.1-க்குப் பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு டேப்ஸ் இடைக்கால நிவாரணத்தொகை கணக்கிடுவது தொடர்பாக அரசின் நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை செயலர் என்.வெங்கடேஷ் கருவூல கணக்குத்துறை இயக்குநருக்கு கடந்த 11-ம் தேதி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளுக்கு மேலும் 18 ஆண்டுகளுக்குள்ளும் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் (டேப்ஸ்) இடைக்கால நிவாரணத்தொகையாக ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்குரிய அகவிலைப்படி (டிஏ) வழங்கப்படும். டேப்ஸ் விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகு தகுதியான பணிக்காலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஊழியருக்கும் அனுமதிக்கத்தக்க தொகை கணக்கிடப்பட்டு அதில் வரும் வித்தியாசம் நிலுவைத்தொகையாக வழங்கப்படும்.
18 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்றோருக்கு அவர்கள் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம், இதில் எது அதிகமோ அந்த தொகை, அதற்குரிய அகவிலைப்படியுடன் சேர்த்து இடைக்கால நிவாரணத்தொகையாக வழங்கப்படும்.
அதேநேரத்தில் 18 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் என்ற அளவில் டேப்ஸ் இடைக்கால நிவாரணத்தொகை அனுமதிக்கப்பட்டிருந்தால், அகவிலைப் படி உள்பட வழங்கப்பட்ட கூடுதல் தொகையானது செப்டம்பர் முதல் இடைக்கால நிவாரணத்தொகையில் இருந்து 10 தவணைகளில் பிடித்தம் செய்யப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்.
டேப்ஸ் இடைக்கால நிவாரணத்தொகைக்கு குறைந்தபட்ச பணிக்காலம் 18 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலர் சோ.சுரேஷ் வெளியிட்ட அறிக்கை: அனைவருக்கும் இடைக்கால அடிப்படை ஓய்வூதியமாக ரூ.10,000 என வரையறுத்திருப்பது அபத்தம். தமிழக அரசு உடனடியாக டேப்ஸ் திட்ட முழுவிதிகளையும் வெளியிட வேண்டும். கடந்த 11-ம் தேதி நிதித்துறைவெளியிட்ட கடிதத்தை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சு.ஜெய ராஜராஜேஸ்வரன், பி.பிரெடெரிக் எங்கெல்ஸ், மு.செல்வக்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: தவெக அரசு, அரசாணை எண் 111 மூலம் டேப்ஸ் திட்டத்துக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்படும் வரை, இடைக்கால பணப்பலன் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. கடைசி மாத ஊதியத்தில் 30 சதவீதமும், அதற்குரிய அகவிலைப்படியும் வழங்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில், நிதித்துறை வெளியிட்டுள்ள கடிதத்தில் குறைந்தபட்ச பணிக்காலம் 18 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதற்கு குறைவாக பணிபுரிந்து, 30 சதவீதம் இடைக்கால பணப்பெற்ற ஓய்வூதியரிடமிருந்து கூடுதலாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருப்பது மனித நேயமற்றச்செயல். தவெக அரசின் இச்செயல் அரசு ஊழியர், ஆசிரியர் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.