தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பாகவே இருக்கும்
சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை 21 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை 2002-ம் ஆண்டில் 45 சதவீதம், 2012-ல் 23 சதவீதம், 2016-ல் 20 சதவீதம் தென்மேற்கு பருவமழை குறைந்து பெய்தது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 21 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரூர் தோகைமலையில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும், தென் மாவட்டங்களில் அதிகமாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பாகவும் பெய்ய வாய்ப்பு.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தைவிட மழை அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.