தமிழகத்தில் மின் பற்றாக்குறையை போக்க காற்றாலை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
கோவை: காற்றாலை உற்பத்தியை அதிகரித்து, மின் பற்றாக்குறையை போக்க, தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம், சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
நாட்டில், 75 சதவீதம் காற்றாலை மின்சாரம் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. இப்போது குஜராத் நம்மை விஞ்சிவிட்டது. தற்போது நம்மிடம், 12,500 மெகாவாட்டுக்கு உற்பத்தி திறன் உள்ளது.
காற்று நன்கு இருக்கும் போது தினசரி, 14 கோடி யூனிட்டும், காற்று இல்லாத போது தினசரி, 50 லட்சம் யூனிட் மின்சாரமும் உற்பத்தியாகும்.
அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர் சங்க துணை தலைவர் இளங்கோ கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை காலத்தில், கடந்தாண்டு மே மாதம் தொடங்கி செப்டம்பர் வரை காற்று நன்கு இருந்தது. இந்தாண்டு ஜூனில் தொடங்கி, செப்டம்பர் நடுவிலேயே மந்தமானது.
10 கோடி யூனிட் இந்த சீசனில், 40 நாட்களுக்கு மேலாக, 10 கோடி யூனிட் உற்பத்தியானது. ஒரு வாரமாக தினசரி, 1.9 கோடி யூனிட் மின்சாரமே கிடைத்துள்ளது.
பழைய காற்றாலைகளை மாற்றி, புதிய காற்றாலை நிறுவுவதால் கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும். புதிய காற்றாலை அமைப்பதற்கான நடைமுறையை அரசு எளிதாக்க வேண்டும். தடையின்மை சான்று, ஒப்புதல் ஆகியவற்றை விரைந்து வழங்க வேண்டும்.
காற்றாலை இருக்கும் இடத்திலேயே, சோலார், பேட்டரியுடன் 'ஹைப்ரிட்' மாடலில் உற்பத்தியை அதிகரிக்க அரசு கொள்கை வகுத்துள்ளது. இப்போது தான் பணி தொடங்கியுள்ளது.
காற்றாலை, சோலார், பேட்டரி என திட்டமிட்டால், ஆண்டு முழுதும் சீரான உற்பத்தி இருக்கும்.மின்சாரத்துக்கு, அடுத்த 10 ஆண்டுக்கான திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள காற்றாலைகளில் 50 சதவீதம் கோவை மண்டலத்திலும், மீதம் தென் மாவட்டங்களிலும் உள்ளது.
காற்றாலை உற்பத்தி செய்த மின்சாரத்தை, வேறு பகுதிக்கு கொண்டு செல்வதற்கான கட்டமைப்பு போதாது. காற்றாலை அமைக்க பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை, முதலீட்டாளர்களை நம் மாநிலத்துக்கு கொண்டு வர வேண்டும்.
நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு இங்கேயே தேவை அதிகமாக உள்ளது. நம்மிடம், நீர்மின் நிலையம், அணுமின் நிலையம், அனல் மின் நிலையம், காற்றாலை, சோலார் உள்ளது. இவற்றை முறையாக செயல்படுத்தினாலே உற்பத்தி அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேவை கிப்ட் சிட்டி அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கையன் கூறுகையில், ''கடந்த கால சிக்கல்களை தவிர்த்து ஒப்புதல்களை விரைந்து வழங்க வேண்டும்.
''காற்றாலை, சோலார் மண்டல பகுதிகளை அறிவித்து, சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். குஜராத்தை போல 'கிப்ட் சிட்டி' உருவாக்கி, கடன் வசதியை துரிதப்படுத்தி, உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும். காற்றாலையுடன், சோலார் உற்பத்தியையும் அதிகப்படுத்த வேண்டும்,'' என்றார்.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''மின்பற்றாக்குறைக்கு காற்றாலை உற்பத்தி குறைந்தது மட்டுமே காரணமல்ல. 2025 ஆகஸ்ட், செப்டம்பர் காலத்தில் நாம், 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தினோம்.
''வெப்பம் காரணமாக இந்தாண்டு, 21 ஆயிரம் மெகாவாட் தேவைப்படுகிறது. தேவை கூடும்போது, உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 23ம் தேதிக்கு பின் காற்றாலை உற்பத்தி சீராகும் என வானிலை ஆய்வில் தெரியவந்து உள்ளது.
''குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான கொள்கைகளை வகுத்து உற்பத்தியை அதிகரிக்கின்றன.
''நாம் சரியான கொள்கைகளை வகுத்து செயல்பட்டால் காற்றாலை வாயிலாகவே, 30 ஆயிரம் யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்,'' என்றார்.