தமிழகத்தில் இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6 இடைத்தேர்தல்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) அறிவித்துள்ளது.
செப்டம்பர் 9ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்.
வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 17ஆம் தேதி.
செப்டம்பர் 19ஆம் தேதி வேட்புமனு திரும்பப்பெறக் கடைசி நாள்.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மீதியுள்ள ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மேலும், முதல்வர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
இதனால் தமிழகத்தில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை ஏழு ஆக உள்ளது.
அத்துடன் புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் ரெஜி நகர், நந்திகிராம் தொகுதிகளுக்கும், அசாம் மாநிலம் நாகான் தொகுதிக்கும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நடப்புக்கு வந்துள்ளன.