📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 30, 2026 12:03 AM

தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து

தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து

தமிழகத்தை உலுக்கிய நெல்லை கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ் (24). மென்பொருள் பொறியாளராக இருந்த இவர், காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி பட்டப்பகலில் காதலித்த பெண்ணின் வீட்டார் தரப்பில் படுகொலை செய்யப்பட்டார். கொலையான கவின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சாதிய நோக்கத்தோடு இந்தக் கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது.

முதலில் பாளையங்கோட்டை போலீசார் இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. முன்னதாக கொலையாளியான பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோரை போலீசார் முதலில் கைது செய்தனர். பின்னர் 9 மாதங்களுக்குப் பிறகு சுர்ஜித்தின் தாயாரும், எஸ்.ஐ.யுமான கிருஷ்ணகுமாரியையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

குற்றப்பத்திரிக்கை ரத்து

இந்நிலையில் இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், சுர்ஜித் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதன்படி காவல்துறை அதிகாரிகளான சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகியோர் கவின் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரி ஜெயபால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.