📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 30, 2026 12:03 AM

பெரம்பூரில் சாலையில் திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி!

பெரம்பூரில் சாலையில் திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி!

பெரம்பூரில் சாலையில் திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை: சென்னை பெரம்பூரில் சாலையில் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலை பகுதியில், குறிப்பாக வசந்த் தியேட்டர் அருகே உள்ள கே.எம். கார்டன் பகுதியில் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 அடிக்கும் மேல் ஆழம் கொண்ட இந்தப் பள்ளம், சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக ஏற்பட்ட அரிப்பே இந்தப் பள்ளம் உருவாக காரணமாக இருக்கலாம் என முதற்கட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பள்ளத்தைச் சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்தப் பகுதி வழியாகச் செல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இதுபோன்ற மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்படுவது இது முதல்முறையல்ல. கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் இதுபோன்ற பள்ளங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டிலும் இதே பேரக்ஸ் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதியும் இதே பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து மெட்ரோ பணிகளின் காரணமாக சாலையில் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டு வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுபோன்ற பள்ளங்கள் உரிய முறையில் சீரமைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிகப்பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.