📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 13, 2026 03:00 PM

தமிழகப் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்

தமிழகப் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்

சென்னை: தமிழகத்தின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ உத்தரவை அதிபர் திரௌபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதம் முதல் அவர் இப்பொறுப்பை கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்த நிலையில், தற்போது அவர் தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவாவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அம்மாநில சட்டப்பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும் இமாச்சலப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, பல்வேறு மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிக்கிம் ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்தூர், கேரள ஆளுநராகப் பதவியேற்க உள்ளார்.

மேலும், ஒடிசா ஆளுநராக பிரஜ் மோகன் ராம், கர்நாடகா ஆளுநராக சுதா யாதவ், உத்தராகண்ட் ஆளுநராக தால் சிங் பிஷென், சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் கவுதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆளுநர்கள் மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில் முறைப்படி பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.