அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லும்: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை: அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டது செல்லும் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக எம்எல்ஏக்களாக வெற்றி பெற்ற எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 பேர் ராஜினாமா செய்தனர். பின்னர், அவர்கள் தவெகவில் ஐக்கியமாகினர். இவர்களில் மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் முறையே மதுராந்தகம், தாராபுரம் தனித் தொகுதி இடைத்தேர்தலில் வென்று எம்எல்ஏக்களாக பொறுப்பும் ஏற்றுக் கொண்டனர்.
இவர்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். அவரின் உத்தரவை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் தனித்தனியே வழக்கை தாக்கல் செய்துள்ளனர். தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் சூழலில், அவர்களின் ராஜினாமாவை ஏற்றது செல்லாது, எனவே ரத்து செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை ஆகும்.
வழக்கில், மனுதாரர்கள், சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் தரப்பில் வாதங்களும் முன் வைக்கப்பட்டன. அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், வழக்கில் முக்கிய தீர்ப்பை சென்னை ஐகோர்ட் இன்று அறிவித்துள்ளது.
உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு தீர்ப்பை வெளியிட்டு உள்ளனர். அதில், அதிமுகவின் 6 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டது செல்லும், அவர்கள் மீதான தகுதி நீக்கம் நடவடிக்கை குறித்து 2 மாதங்களில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.