📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 26, 2026 03:04 PM

திருத்தந்தையின் பிரான்ஸ் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள்

திருத்தந்தையின் பிரான்ஸ் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள்

திருத்தந்தையின் பிரான்ஸ் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள்

இம்மானுவேல் மரியான் – வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பிரான்ஸ் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் முதல் நாளை இன்று செப்டம்பர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியிருக்கிறார்.

காலை 7:50 மணிக்கு உரோமையிலுள்ள பிளமிங்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, காலை மணி 10:00 க்கு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரின் ஓர்லி சர்வதேச விமான நிலையம் வந்திறங்குகிறார்.

இன்றைய பிரான்ஸ் நாடு பண்டைய காலத்தில் 'கால்' (Gaul) என்று அழைக்கப்பட்டது. ரோமானியர்களின் ஆட்சியில் இதன் தலைநகரமாக விளங்கியது லுக்முனம் (Lugdunum) இன்றைய லியோன் ஆகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதலே பிரான்சில் கிறிஸ்தவம் வேரூன்றியது. லியோன் நகரம் வணிக மையமாகவும், பிரான்சின் முதல் கிறிஸ்தவ விசுவாசிகள் துன்புறுத்தப்பட்டு இரத்தசாட்சிகளான இடமாகவும் திகழ்ந்தது. பாரிஸின் ஆரம்ப வடிவமான லூடீசியா (Lutetia) மற்றும் நிம் (Nîmes) போன்ற பிற நகரங்களும் ரோமானியப் பண்பாட்டின் எச்சங்களை இன்றும் தாங்கி நிற்கின்றன. ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவ நம்பிக்கை கால் பகுதியில் பரவத் தொடங்கியது. பின்னர் துறவியர், ஆயர்கள், மறைப்பணியாளர்கள் மற்றும் இல்லங்கள் மூலம் கிறிஸ்தவ வாழ்க்கை ஆழமான சமூக வேர்களைப் பெற்றது. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது கி.பி. 496 இல் பிராங்க்ஸ் மன்னரான குளோவிஸ் (Clovis) திருமுழுக்குப் பெற்று கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவியபின் பிரான்ஸ் ஐரோப்பாவின் முக்கிய கிறிஸ்தவ நாடாக மாறியது. பிரான்சின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக அமைந்தது. அவரது மனைவி குலோட்டில் (Clotilde) கிறிஸ்தவ நம்பிக்கையில் அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று பாரம்பரியம் கூறுகிறது. க்ளோவிஸுடன் தொடர்புடைய (Reims) ரெய்ம் நகரம் பின்னர் பிரெஞ்சு அரசர்களின் முடிசூட்டு மரபுடன் இணைந்தது.

பேரரசர் சார்லமேன் காலத்தில் இதன் வேர்கள் மேலும் பலப்பட்டன. பிரெஞ்சுப் புரட்சியின் போது (1789) கடுமையான சோதனைகளைச் சந்தித்தாலும், அது மீண்டு எழுந்தது.

மறைப்பணிகள்: பிரெஞ்சு கிறிஸ்தவர்கள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று நற்செய்தியைப் பரப்பினர். கல்வி, மருத்துவம் மற்றும் மனிதநேயப் பணிகளுடன் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டனர்.

'லூர்து' (Lourdes) போன்ற இடங்கள் அற்புதங்களுக்கும் குணமடைதலுக்கும் உலகப் புகழ்பெற்றவை. தற்காலத்தில் பிரான்ஸ் தேசம் தீவிர மதச்சார்பின்மையை (Laïcité) பின்பற்றியபோதும் கிறிஸ்தவ நம்பிக்கை புதிய வடிவங்களில் தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்குகிறது.

பிரான்சில் உள்ள புகழ்பெற்ற கோதிக் பேராலயங்களான (Notre-Dame de Paris) பாரிஸ் அன்னை பேராலயம், (Chartres Cathedral) ஷார்ட் பேராலயம், (Reims Cathedral) ரீம்ஸ் பேராலயம், மற்றும் (Amiens Cathedral) அமீயென் பேராலயம் போன்ற பேராலயங்கள் வெறும் கட்டிடங்கள் அல்ல. அந்தக் காலத்து சாதாரண மக்களுக்கு அவை “கல்லில் எழுதப்பட்ட விவிலியம்.” எழுத்தறிவு குறைவாக இருந்த காலத்தில் கண்ணாடி ஓவியங்கள், சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள், சிலுவை, புனிதர்களின் வாழ்க்கைக் காட்சிகள் மூலம் விவிலியக் கதைகள் மக்களுக்குக் கற்பிக்கப்பட்டன. இது இன்று நாம் பயன்படுத்தும் (visual storytelling) காட்சிவழி கதைசொல்லுதலுக்கு ஒரு பழமையான உதாரணம்.

பிரான்சின் மிகப் பெரிய பங்களிப்புகளில் ஒன்று அதன் மறைபரப்பு இயக்கங்கள்.

பல பிரெஞ்சு குருக்கள், துறவியர், துறவியர் சபைகள் மற்றும் மறைப்பணியாளர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் பிற பகுதிகளுக்குச் சென்றனர். குறிப்பாக பாரிஸ் அயலக நற்செய்தி அறிவிப்பு சபை (Paris Foreign Missions Society - MEP) போன்ற அமைப்புகள் ஆசிய நாடுகளில் கத்தோலிக்க மறைப்பணியில் முக்கிய பங்கு வகித்தன.

பாரிஸ் நகரின் உலகப் புகழ்பெற்ற மிக முக்கிய அடையாளம் ஈபிள் டவர் இரும்பு கோபுரம், உலகிலேயே மிகப்பெரிய மற்றும் மிக அதிக பார்வையாளர்கள் வரக்கூடிய லூவ்ரே கலை அருங்காட்சியகம், பாரிஸ் நகரம் உலக ஃபேஷன் துறையின் தலைநகரம், பாரிஸ் நகரத்தின் கலாச்சாரத்தில் தெருவோர கஃபேக்கள் என்பெதெல்லாம் பாரிஸ் நகரை உணர்ந்துகொள்ள போதுமானதல்ல. பாரிஸ் நகரத்தின் ஆழத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்ந்த கிறிஸ்தவ வரலாறு, புனிதர்கள், பேராலயங்கள், துறவற இயக்கங்கள், கல்வி, மறைப்பணி, ஏழைகளுக்கான சேவை, புரட்சி, மதச்சார்பின்மை மற்றும் புதிய ஆன்மிகத் தேடல் ஆகியவை உள்ளன. பாரிஸ் இன்று உலகப் புகழ்பெற்ற நகரமாக இருப்பதற்கு முன்பே, அது லூடீசியா என்ற ரோமானிய நகரமாக இருந்தது. பாரிஸ் மறைமாவட்டத்தின் வரலாற்றுப் பதிவுகளின்படி, அங்கு உள்ளூர் திருச்சபை சுமார் கி.பி. 250 காலத்திலேயே உருவாகியிருந்தது. ஆரம்பகால கிறிஸ்தவ சமூக வளர்ச்சியில் மத்திய தரைக்கடல் மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்து வந்த வணிகர்களும் தொழிலாளர்களும் பங்கு பெற்றனர். பாரிஸின் ஆரம்பகால ஆயர்களில் ஒருவர் புனித மார்சல் (Saint Marcel). 4 ஆம் நூற்றாண்டில் பாரிஸ் ஏற்கனவே ஒரு முக்கிய கிறிஸ்தவ மையமாக இருந்தது. கி.பி. 360–361 காலப்பகுதியில் நடைபெற்ற பாரிஸ் சங்கத்தில் புனித மார்சல் பங்கேற்றதாக வரலாற்றுப் பதிவு உள்ளது. மற்றொரு முக்கியமான நபர் புனித ஜெனிவீவ். அவர் சுமார் 420 இல் பிறந்தார். இளம் வயதிலேயே கடவுளுக்கு தன்னை அர்ப்பணித்தார். பின்னர் பாரிஸில் துறவற அர்ப்பணிப்புடன் வாழ்ந்தார். கிபி 451 இல் அட்டிலாவின் தலைமையிலான கன்ஸ் பாரிஸ் நோக்கி வந்தபோது மக்கள் பயந்து நகரத்தை விட்டு வெளியேறத் தயாரானார்கள். அப்போது புனித ஜெனிவீவ் அவர்கள் பயப்படாதீர்கள்; ஜெபியுங்கள் மக்களை ஊக்குவித்ததாக நோன்பு மற்றும் ஜெபத்திற்கு அழைத்தார். பின்னர் பாரிஸ் மீது எதிர்பார்த்த தாக்குதல் நடைபெறவில்லை. என்று திருச்சபை மரபு கூறுகிறது.

குறிப்பாக திருத்தந்தை அவர்கள் வந்திறங்கும் ஓர்லி சர்வதேச விமான நிலையம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. முதல் உலகப்போருக்கு முன்னரே விமான பயிற்சித்தளமாக இருந்தது. 1932-ல் தொடங்கப்பட்ட ஓர்லி விமான நிலையம் (Orly Airport), இரண்டாம் உலகப் போரின் போது கடுமையான குண்டுவீச்சுகளுக்கு ஆளாகி நசமடைந்தது. போருக்குப் பிறகு மீட்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட இது, 1960-களில் பிரான்சின் நவீன வளர்ச்சியின் அடையாளமாக மாறியது; வெர்சாய்ஸ் அரண்மனையை விட அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. இன்றளவில், இது பிரான்சின் உள்நாட்டுப் போக்குவரத்துக்கும், ஐரோப்பிய மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்குமான முக்கியப் பயண முனையமாகத் திகழ்கிறது. மனிதர்களின் சந்திப்புகளையும், பிரியங்களையும் இணைக்கும் உணர்வுபூர்வமான ஒரு வாசலாகவும் இது விளங்குகிறது.

காலை மணி 11:00 க்கு பாரிஸ் எலிசி மாளிகையில் குடியரசுத் தலைவரை மரியாதையின் நிமித்தமாக சந்திக்கிறார். மதியம் முற்பகல் மணி 11:45 க்கு எலிசி மாளிகையில் அதிகாரிகள், குடிமைச் சமூகம் மற்றும் தூதரக அதிகாரிகளையும் சந்திக்கிறார்.

1718-ல் ஒரு பிரபுவின் மாளிகையாகக் கட்டப்பட்ட எலிசி அரண்மனை (Élysée Palace), பின்னர் 15-ஆம் லூயி மற்றும் நெப்போலியன் போன்ற வரலாற்று தலைவர்களின் கைகளில் இருந்தது. 1848 முதல் பிரெஞ்சு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் அலுவலகமாகவும் இது திகழ்கிறது. பிரான்சின் ஆட்சி அதிகார மையம் மட்டுமல்லாமல், சர்வதேச தூதரக உறவுகளின் மிக முக்கியமான இடமாகவும் இது விளங்குகின்றது. நாட்டின் வரலாற்றையும், பொறுப்புணர்வையும் சுமந்து நிற்கும் ஒரு அடையாளமாக இது திகழ்கிறது.

பின்னர் பிற்பகல் 3:00 மணிக்கு யுனெஸ்கோ (UNESCO) தலைமையகத்திற்குப் பயணம் சென்று அங்குள்ளவர்களைச் சந்திக்கிறார்.

யுனெஸ்கோ என்பதன் விரிவாக்கம் (United Nations Educational, Scientific and Cultural Organization) ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு. இதன் தலைமை அலுவலகம் பாரிஸ் நகரின் மையப்பகுதியில் பிளேஸ் டி பான்டெனுவாவில் (Place de Fontenoy) அமைந்துள்ளது. 3 நவம்பர் 1958 இல் திறக்கப்பட்ட இந்த வளாகம், நவீன கட்டிடக்கலை மற்றும் உலகளாவிய கலைப் படைப்புகளின் (பிக்சோ, மிரோ போன்றோரின் படைப்புகள்) உறைவிடமாகத் திகழ்கிறது. யுனெஸ்கோவின் தலைமையகம் ஒரு சாதாரண சர்வதேச அலுவலகம் அல்ல. அது கல்வி, அறிவியல், பண்பாடு, தகவல் மற்றும் மனிதகுலத்தின் அமைதி ஆகியவற்றை ஒன்றோடொன்று இணைக்கும் உலகளாவிய நிறுவனத்தின் மையம்.

உலக பாரம்பரிய சின்னங்களை (World Heritage Sites) பாதுகாத்தல், உலகளாவிய கல்வி மற்றும் எழுத்தறிவை மேம்படுத்துதல், அறிவியல் ஒத்துழைப்பை வளர்த்தல் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்தல் போன்ற மகத்தான பணிகளை இது உலகளவில் முன்னெடுத்துச் செல்வதே அதன் அடிப்படை நோக்கம்.

யுனெஸ்கோவைப் புரிந்துகொள்ள இரண்டாம் உலகப்போர் பின்னணியைப் பார்க்க வேண்டும். இரண்டு உலகப்போர்களும் மனிதகுலத்திற்கு ஒரு கடுமையான பாடத்தை கற்றுக் கொடுத்தன. போர் ஆயுதங்களால் மட்டும் தொடங்குவதில்லை; மனிதர்களின் மனங்களிலும் அது உருவாகிறது. இனவெறி, வெறுப்பு, தவறான பிரச்சாரம், போலியான அறிவியல், பிற மனிதர்களைத் தாழ்வாகக் கருதுதல் ஆகியவை சமூகங்களை அழிவுக்குக் கொண்டு செல்ல முடியும். இதனால் யுனெஸ்கோவின் அரசியலமைப்பில் ஒரு புகழ்பெற்ற கருத்து இடம்பெற்றது. Since wars begin in the minds of women and men… அதாவது போர் மனித மனங்களில் உருவாகிறதென்றால், அமைதிக்கான பாதுகாப்பும் மனித மனங்களில் உருவாக்கப்பட வேண்டும். இதுதான் யுனெஸ்கோவின் அடிப்படை தத்துவம்.

யுனெஸ்கோ தலைமையகத்தைப் பார்வையிட்ட பின்னர் மாலை 5:45 மணிக்கு நோட்ரே-டேம் பெருங்கோவிலில் ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள், துறவிகள் மற்றும் குருமாணவர்களுடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

நோட்ரே டேம் டி பாரிஸ் என்பது ஒரு பழமையான பேராலயம் மட்டுமல்ல. பிரான்சின் கிறிஸ்தவ வரலாறு, பாரிஸ் நகரத்தின் வரலாறு, கோத்திக் கட்டிடக்கலை, கலை, இலக்கியம், மக்கள் நினைவு, துன்பத்திலிருந்து மீண்டெழுதல் ஆகிய அனைத்தும் சந்திக்கும் ஒரு முக்கிய இடம். நோட்ரே டேம் என்ற பிரெஞ்சு சொல் “எங்கள் அன்னை” என்று பொருள். இங்கு அது அன்னை மரியாவை குறிக்கிறது.பாரிஸின் மையப்பகுதியான சீன் (River Seine) ஆற்றின் அருகில் இந்தப் ம் அமைந்துள்ளது. இந்த இடம் பாரிஸ் நகரத்தின் ஆரம்பகால வரலாற்றுடன் மிகவும் நெருக்கமாக இணைந்தது. 12ஆம் நூற்றாண்டில் பாரிஸ் நகர மக்கள் தொகை அதிகரித்தபோது, அங்கு இருந்த பேராலயத்தைவிட மிகப் பெரிய பேராலயம் தேவைப்பட்டது. பாரிஸ் ஆயர் மாரிஸ் டி சுல்லி புதிய பேராலயத்தை உருவாக்க முனைந்தார். கட்டுமானம் 1163-ல் தொடங்கி, பல கட்டங்களாக 13ஆம் நூற்றாண்டில் நிறைவு பெற்றது. இது ஒரு கட்டிடம் மட்டும் அல்ல; பல தலைமுறைகளின் ஆன்மிக நினைவகம். அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், பிரான்சின் மரியன்னை பக்தி வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் பதிமூன்றாம் லூயிஸ் காலத்தில்இ பிரான்ஸ் அரசாட்சி கன்னி மரியாவின் பாதுகாப்பிற்கு தன்னை அர்ப்பணிக்கும் ஒரு உறுதிமொழியுடன் நோட்ரே டேம் இல் புதிய பிரதான பீடம் அமைக்கப்பட்டது.

நோட்ரே டேம் இன் வரலாற்றில் அரசியல் வரலாறும் கிறிஸ்தவ நம்பிக்கையும் ஒன்றோடொன்று சந்தித்த தருணங்கள் உள்ளன. 13ஆம் நூற்றாண்டில் பிரான்சின் மன்னர் புனித ஒன்பதாம் திமூன்றாம் லூயிஸ் இயேசுவின் பாடுகளுடன் தொடர்புடைய திருப்பண்டங்களை எருசலமிலிருந்து பாரிசுக்கு கொண்டு வந்தார்.

இது கோத்திக் கட்டிடக்கலையின் மகத்துவம் பெற்றது. 12-ஆம் நூற்றாண்டில் கட்டத் தொடங்கப்பட்ட நோட்ரே-டேம் பேராலயம் பிரெஞ்சு வரலாற்றின் மிக முக்கியமான சின்னமாகும். நெப்போலியனின் முடிசூட்டு விழா உள்ளிட்ட பல வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக விளங்கிய இது, 19ஆம் நூற்றாண்டில் பேராலயம் புறக்கணிப்பு மற்றும் சேதத்தால் மோசமான நிலையில் இருந்தது.விக்டர் ஹியூகோவின் தி கங்ச்பேக் ஆம் நோட்டர் டாம் (The Hunchback of Notre-Dame) நாவலால் உலகப் புகழ் பெற்றது. அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு எழுத்தாளரின் கதை ஒரு கட்டிடத்தின் மீதான மக்களின் பார்வையை மாற்றியது. ஒரு கட்டிடம் வரலாற்றைச் சொல்லலாம்; ஆனால் ஒரு கதை அந்த வரலாற்றை மீண்டும் மக்களின் இதயத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.

2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர தீ விபத்தில் இதன் கூரையும் கோபுரமும் சேதமடைந்தன. உலகளாவிய பெரும் முயற்சியால் சீரமைக்கப்பட்ட இப்பேராலயம், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 2024-ல் மீண்டும் திறக்கப்பட்டு, தனது விசுவாசப் பயணத்தைத் தொடர்கிறது.

நோட்டர் டாம் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், இறுதியாக இரவு மணி 9:00 க்கு சான்ந்தெனியில் ஸ்டாட் தி பிரான்ஸ் மைதானத்தில் இளைஞர்களுடன் இணைந்து இரவு விழிப்பு செபம் செய்து தனது இன்றைய நாளுக்கான பயணத்தை நிறைவு செய்கிறார்.

பாரிஸுக்கு அருகில் உள்ள செயின்ட்-டெனிஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் (Stade de France), 1998 கால்பந்து உலகக் கோப்பையை நடத்துவதற்காகக் கட்டப்பட்ட பிரான்சின் தேசிய ஸ்டேடியமாகும். இதே மைதானத்தில் பிரெஞ்சு அணி பிரேசிலை வீழ்த்தி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். நவீன கட்டிடக்கலையின் அற்புதமாக விளங்கும் இந்த அரங்கம், உலகக் கோப்பைகள், உலக தடகளப் போட்டிகள் மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் போன்ற பல சர்வதேச நிகழ்வுகளுக்குத் தாயகமாகத் திகழ்கிறது. மனிதர்களின் கூட்டு மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் நவீன அடையாளமாக இது விளங்குகிறது. இது வெறும் விளையாட்டு மைதானம் அல்ல. பிரான்சின் விளையாட்டு வரலாறு, தேசிய நினைவு, இசை, இளைஞர்கள் மற்றும் பெரிய அளவிலான மக்கள் கூடுகைகளின் முக்கிய இடமாகவும், நாட்டின் கலை கலாச்சார மையமாகவும் திகழ்கிறது.

திருதந்தை பதினான்காம் லியோ அவர்கள் இளைஞர்களுடன் இணைந்து இரவு விழிப்பு செபம் செய்து பிரான்ஸ் நாட்டிற்கான தனது முதல் நாள் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.