📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 15, 2026 12:30 AM

தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் தனித்துப் போட்டி: இடதுசாரிகள்

தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் தனித்துப் போட்டி: இடதுசாரிகள்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்தவொரு கூட்டணிக்கும் ஆதரவளிக்காமல் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களமிறங்குகின்றன.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்தது.

காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்ற நிலையில், கொள்கை அடிப்படையில் இடதுசாரிகள் ஆட்சியில் பங்கேற்காமல் வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு அளித்து வந்தன.

இதனிடையே, காலியான 7 தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இல்லாத தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இத்தேர்தலில் ஆளும்கட்சியான தவெக, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், இடதுசாரிகளின் முடிவு குறித்து எதிர்பார்ப்பு நிலவியது.

இது குறித்து முடிவெடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் அதன் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் சென்னையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் அதன் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் திருச்சியிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

கூட்டத்தின் முடிவில், இடைத்தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தராமல் தனித்துப் போட்டியிடுவது என இரு கட்சிகளும் கூட்டாக முடிவெடுத்தன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை. பாஜகவின் மறைமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம்,” என்று விளக்கமளித்தார்.