தாம்பரம்
தாம்பரம் - கடற்கரை சென்ற புறநகர் மின்சார ரயிலின் பெட்டி, சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்து
சென்னை: தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில், சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே இன்று தடம் புரண்டது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதால், சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்களும் அலுவலகம் செல்பவர்களும் இன்று காலை சென்னை நோக்கி திரும்பினர்.
இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வழக்கத்தை விடக் கூட்டம் அலைமோதியது. இந்த பயணிகள் கூட்ட நெரிசலுக்கு இடையில், தாம்பரத்தில் இருந்து கடற்கரை சென்ற மின்சார ரயிலின் 5-வது பெட்டியின் ஒரு சக்கரம் சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே திடீரென தடம் புரண்டது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது.
தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி வரக்கூடிய மின்சார ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டு, தாமதமாக இயக்கப்படுகின்றன. ஏற்கனவே ரயில் நிலையங்களில் அதிக கூட்டம் காணப்படும் நிலையில், திடீரென ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.