📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 29, 2026 03:03 PM

 த.வெ.க., மீது ஐகோர்ட்டில் தி.மு.க., புகார்

 த.வெ.க., மீது ஐகோர்ட்டில் தி.மு.க., புகார்

சென்னை: சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 'ஜெம் கிரானைட்ஸ்' தொழிலதிபர் வீரமணிக்கு எதிரான வழக்கில், சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், முந்தைய தி.மு.க., அரசு தப்பிக்க விட்டு விட்டதாக, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

அதேபோல், த.வெ.க., தகவல் தொழில்நுட்ப பிரிவும், சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டது. இதையடுத்து, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அமைச்சர்களின் கருத்து, தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், இந்த விவகாரத்தில் தி.மு.க., அரசு மீது குற்றஞ்சாட்டுவதற்கு, ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் மற்றும் த.வெ.க., தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, துரைமுருகன் சார்பில், 'வீரமணி விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்ற நீதிமன்ற அறிவுறுத்தலை, த.வெ.க.,வினர் பின்பற்றாமல், தொடர்ந்து பேசி வருகின்றனர்' என வாதிடப்பட்டது.

இதையடுத்து, 'இது குறித்து, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் கருத்தில் கொள்ள வேண்டும்' என கூறிய நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்வதற்காக, விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.