📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 19, 2026 07:33 PM

ரூ.1,000 கோடி முறைகேடு?

ரூ.1,000 கோடி முறைகேடு?

ரூ.1,000 கோடி முறைகேடு? - சிக்கிய அன்பில்... சிக்கலில் அறிவாலயம்!

டி.டி.சி.பி-யின் திட்டமிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களை ‘கமர்ஷியல்’ என்று வகைப்படுத்திவிட்டனர். அதனாலும், அவற்றை முறைப்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அரசு அங்கீகாரம், தர உயர்வு, டி.டி.சி.பி அனுமதி உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாகப் பதிவாகியிருக்கும் வழக்கு, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குப் பெரும் நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது. இந்த வழக்கில் அவர் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையிலும் திருச்சியிலும் மகேஸுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடியாகச் சோதனை நடத்தியிருக்கிறார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார். ஆவணங்களையும் அள்ளிச் சென்றிருக்கிறார்கள்.

“இந்த வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகியிருக்கும் தி.மு.க பிரமுகர் பி.டி.அரசகுமார், போலீஸ் விசாரணையில் பல உண்மைகளைக் கக்கியிருக்கிறார். விசாரணையின் தொடக்கத்தில், 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாகத்தான் கண்டறிந்தோம். இப்போது, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாமெனக் கருதுகிறோம். சமீபகாலத்தில், பள்ளிக்கல்வித்துறையில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான்...” என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

தமிழக அரசியலிலும், கல்வித்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வழக்கில் என்ன நடக்கிறது?

வழக்கின் பின்னணி என்ன?

இது பற்றி விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது, ``தமிழ்நாட்டில், நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ என 12,000-க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் பள்ளிகள் கல்வித்துறையால் ஆய்வுசெய்யப்பட்டு, அதன் அங்கீகாரம் புதுப்பிக்கப்படும்.2022-ம் ஆண்டு முதல் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை. அதேபோல, தனியார் பள்ளிகளுக்கான நகர ஊரமைப்பு இயக்ககத்தின் (டி.டி.சி.பி) அனுமதி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. அதாவது, டி.டி.சி.பி-யின் திட்டமிடப்படாத பகுதிகளில், 2011-ம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, ஒரு சதுர அடிக்கு ஏழு ரூபாய் வீதம் கட்டணமாகச் செலுத்தி அனுமதி பெறப்பட்டது. ஆனால், 2011-க்குப் பிறகு கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இந்த வசூல் வேட்டையில் முதலில் அடிபடும் பெயர் பி.டி.அரசகுமார். தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த பி.டி.அரசகுமார், ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பதிவு செய்யப்படாத சங்கத்தை வைத்துக்கொண்டு, ‘நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருகிறேன், பள்ளிக் கட்டடங்களுக்கு டி.டி.சி.பி மூலம் அனுமதி பெற்றுத் தருகிறேன்’ என்று தமிழ்நாடு முழுவதும் வசூலைப் பிரித்து மேய்ந்திருக்கிறார். அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நெருக்கமானவர் என்பதாலும், தி.மு.க-வில் பொறுப்பில் இருந்ததாலும், ஆயிரக்கணக்கான பள்ளி நிர்வாகங்கள் அரசகுமாரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்திருக்கின்றன.

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே இந்த விவகாரம் வெடித்து வீதிக்கு வந்தபோது, அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் ஆதரவு இருந்ததால், அரசகுமாரை யாராலும் தொட முடியவில்லை. ஆட்சி மாறிய நிலையில், பண மோசடி வழக்கில் அரசகுமாரைக் கொத்தாகத் தூக்கியது சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு. அவரோடு சேர்த்து சுரேஷ், ஆரோக்கியராஜ் ஆகியோரும் கடந்த ஜூன் 27-ம் தேதி கைதுசெய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் அரசகுமார் கக்கிய தகவல்கள்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும் இந்த வழக்கில் சேர்த்துவிட்டது’’ என்றார்கள்.

“எல்லாம் அன்பிலுக்குத் தெரியும்...” - போட்டுக்கொடுத்த அரசகுமார்!

கடந்த 16-ம் தேதி திருச்சியிலும் சென்னையிலும் மகேஸுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடியாக ரெய்டு நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், எட்டு பென்டிரைவ்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். மகேஸின் உதவியாளர்கள் அருண், பிரகாஷ், உறவினரான வாளாடி கார்த்திக் ஆகியோரின் இடங்களிலும் சோதனைகள் நடந்தன. தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரில்தான் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. வழக்கு தொடர்பாக அவர் அளித்திருக்கும் ஆதாரங்களெல்லாம் முக்கியமானவை என்கிறார்கள் காக்கிகள்.

நம்மிடம் பேசிய சீனியர் காவல்துறை அதிகாரிகள் சிலர், “இந்தப் பண மோசடியில் பி.டி.அரசகுமாரும் முத்துக்குமாரும் மூளைகளாகச் செயல்பட்டிருக்கிறார்கள். 2011 சட்டமன்றத் தேர்தலில், விருத்தாசலத்தில் தே.மு.தி.கஎம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற முத்துக்குமார், 2017-ல் தி.மு.க-வில் இணைந்தார். அன்பில் மகேஸுக்கு நண்பரானவர், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் மகேஸுக்கு பி.ஏ-வாக மாறி நிழல் அமைச்சர்போலச் செயல்பட்டிருக்கிறார். முத்துக்குமாருக்காகவே, ‘பெற்றோர் - ஆசிரியர் கழக மாநிலத் துணைத் தலைவர்’ என்ற புதிய பதவியை, பள்ளிக்கல்வித்துறைக்குள் உருவாக்கினார்கள்.

கடந்த தி.மு.க ஆட்சியில், சி.பி.எஸ்.இ., மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு என்.ஓ.சி வழங்குவது, தரம் உயர்த்துவது உள்ளிட்ட வேலைகளுக்கு ‘கலெக்‌ஷன்’ ஏஜென்ட்டாக இருந்தது முத்துக்குமார்தான். அதற்காக, சென்னை தி.நகரில் தனியே ஒரு அலுவலகம் அமைத்து, பத்துப் பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தார் முத்துக்குமார். அங்குதான் தனியார் பள்ளி நிர்வாகிகளை அழைத்து மீட்டிங் போட்டிருக்கிறார்கள். அரசகுமார் சொல்லி, பணம் கைமாறியிருக்கிறது. ஆனால், சொன்னபடி எந்த அங்கீகாரத்தையும் பெற்றுத்தரவில்லை. இப்படி ஏமாந்த 117 பேர் இதுவரை புகாரளித்திருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டவர்கள் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு அவர்களின் வாக்குமூலமும் பெறப்பட்டிருக்கிறது.

அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்த உண்மைகளையும் கக்கிவிட்டார். ‘நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாகச் சொல்லி பணம் வசூலித்தது உண்மைதான். ஆனால், மொத்தமாக நான் எடுத்துக்கொள்ளவில்லையே... அப்போதைய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொன்னவர்களிடம் பணத்தைக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய சங்கத்தில் இருந்தவர்களிடமும் பணத்தைப் பிரித்து அளித்திருக்கிறேன். இதில் என்ன நடந்தது என்பதெல்லாம் மகேஸுக்குத் தெரியும்...’ என்று போட்டுடைத்துவிட்டார். அதன் பின்னர்தான் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்தோம்.

நாங்கள் விசாரணையைத் தொடங்கியபோதே, முத்துக்குமார் தலைமறைவாகிவிட்டார். அவருடைய 29 வங்கிக் கணக்குகளை ஆய்வுசெய்தபோது, சந்தேகத்துக்கிடமான பல பரிவர்த்தனைகள் சிக்கின. அதேபோல, அரசகுமாரும் சில தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து ஜிபே மூலமாகப் பணம் பெற்றிருக்கிறார். இதுவரை விசாரணையில் கிடைத்த தகவலின்படி, ரூ.1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது. பல நூறு பள்ளி நிர்வாகத்தினர் பாதிப்படைந்திருக்கிறார்கள். அரசகுமாரிடமிருந்து கைப்பற்றிய ஆவணங்களில், ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர்களிலும் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது.

அன்பில் மகேஸ் அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், அவருடைய மனைவி ஜனனியின் தோழிதான் டிரான்ஸ்ஃபர் விவகாரங்களைப் பார்த்துக்கொண்டார். அதற்காகவே கோட்டூர்புரத்தில் ஒரு அலுவலகம் செயல்பட்டது. அடுத்ததாக அருள் முருகன், பிரகாஷ், உமா ஷங்கர் என்று பல உதவியாளர்களும் டிரான்ஸ்ஃபர் விவகாரத்தைக் கையாண்டிருக்கிறார்கள். இறுதியாக, முத்துக்குமாரே அந்தப் பொறுப்பை ஏற்று நடத்தியிருக்கிறார். இதில், ஒவ்வொரு டிரான்ஸ்ஃபருக்கும் எவ்வளவு வசூலிக்கப்பட்டது என்பதை விசாரித்துவருகிறோம்.

இந்தப் பண மோசடி வழக்கில், அன்பில் மகேஸுக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்திருப்பதால், அவரை செப்டம்பர் 18-ம் தேதி விசாரணைக்கு அழைத்திருக்கிறோம். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப் படவிருக்கின்றன. விசா ரணையின் இறுதியில் அவர் கைதுசெய்யப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அரசகுமாரின் செல்போன் கால் ஹிஸ்டரியை ஆய்வுசெய்ததில், அவருடன் சில கல்வித்துறை அதிகாரிகளும், அன்பில் மகேஸின் உதவியாளர்களும் அடிக்கடி பேசியிருக்கிறார்கள். அவர்களுக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்படும்” என்றனர் விரிவாக.

தனியார் பள்ளிகளுக்கு என்.ஓ.சி வழங்கக்கூடிய அதிகாரம், தனியார் பள்ளிகள் இயக்குநரகத்திடம் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருந்தபோது, நான்கு அதிகாரிகள் இயக்குநர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். அவர்களில் நாகராஜ முருகன், முத்து பழனிசாமி, குப்புசாமி ஆகிய மூன்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியிருக்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

அங்கீகாரம் பெற்றுத்தருவதாக மோசடி செய்த வழக்கில் அன்பில் மகேஸ் சிக்கிய அதிர்ச்சி ஒருபுறமிருக்க, அவருடைய உறவினர் வாளாடி கார்த்திக்கும் குறிவைக்கப்பட்டிருப்பதுதான் அறிவாலயத்தின் வயிற்றை ரொம்பவும் கலக்கியிருக்கிறது. அது குறித்து நம்மிடம் பேசிய சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக சீனியர் அதிகாரி ஒருவர், “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தினரிடம் நெருக்கமாக இருப்பவர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் நீண்டகால நண்பர். இந்த வழக்கில் எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அந்தப் பணம், தி.மு.க-விலுள்ள முக்கியஸ்தர்களுக்கும் பங்கு பிரிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அது குறித்தும் விசாரித்து வருகிறது போலீஸ்.

தேர்தல் சமயத்தில் அன்பில் மகேஸின் கட்டுப்பாட்டில்தான் தேர்தல் வியூக நிறுவனங்கள் செயல்பட்டிருக்கின்றன. அதற்கும், இந்த முறைகேட்டில் கிடைத்த கொள்ளைப் பணம் பயன்பட்டிருக்கலாமெனக் கருதுகிறோம். டெல்டாவிலுள்ள எந்தக் கோயிலுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா சென்றாலும், அதற்கான ஏற்பாடுகளைப் பார்த்துக்கொண்டவர் அன்பில் மகேஸின் உறவினரான வாளாடி கார்த்திக். துர்காவின் காரியதரிசியாகவும் செயல்பட்டவர். வாளாடி கார்த்திக் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டிருப்பதால், ‘அவர் மூலமாக துர்கா ஸ்டாலினுக்கு செக் வைப்பார்களோ...’ என்று அரண்டுகிடக்கிறது அறிவாலயம். கூடவே, இந்த முறைகேடுகளில் மூன்று முக்கியஐ.பி.எஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்பதால், அவர்களை நோக்கியும் போலீஸ் நகர்கிறது” என்றார்.

போலீஸ் தரப்பில் இவ்வளவு ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தாலும், “எங்களுக்கு மடியில் கனமில்லை; அதனால் வழியில் பயமில்லை” என்று விளக்கமளித்திருக்கிறார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. அதோடு, “இந்த ரெய்டின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்பேன்” என்று சவாலும் விட்டிருக்கிறார். அவர் சவால் விட்டிருப்பதே, தி.மு.க-வில் தனக்கு எதிராக இருக்கும் சில புல்லுருவிகளுக்குத்தான் என்கிறார்கள் திருச்சி தி.மு.க-வினர்.

அன்பிலை வளைத்து, அவர் மூலமாக உதயநிதிக்கு ‘செக்’ வைக்க, காய்களை நகர்த்துகிறது த.வெ.க தலைமை. ஏற்கெனவே, ‘பார்ட்டி ஃபண்ட்’ விவகாரம் சட்டமன்றத்தில் அனலைக் கிளப்பிய நிலையில், மகேஸ் மீதான வழக்கின் மூலமாக, மீண்டுமொரு தீப்பொறியைப் பறக்கவிடத் திட்டமிடுகிறார் முதல்வர் விஜய். தமிழகமெங்கும் மின்வெட்டு பிரச்னை, விவசாயிகள் போராட்டம், தலைமைச் செயலக திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு, வெளிநாடு முதலீடு விசிட் சர்ச்சை என்று த.வெ.க ஆட்சிக்கு எதிராகப் பல விஷயங்கள் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், அதிலிருந்து மக்களை டைவர்ட் செய்ய மகேஸின் வழக்கு பயன்படுமெனக் கணக்கு போடுகிறது ஆட்சி மேலிடம். சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் விசாரணைக்கு மகேஸ் ஆஜரான பின்னர், அடுத்த பரபரப்புச் செய்தி வெளிவரலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!