ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது தவெக தலைவர்கள் விருப்பம்
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது தவெக தலைவர்கள் விருப்பம்- திருமாவளவன் எம்.பி. பேட்டி
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை தவெக மூத்த தலைவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து என்று திருமாவளவன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
Published : September 4, 2026 at 10:47 PM IST
சென்னை: ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று தவெக தலைவர்கள் விரும்புவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசு உணர்ந்து உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும். தற்போது தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தள்ளி வைத்து இருக்கிறார்கள். போராட்டப் பிரதிநிதிகளுடன் அரசு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வர வேண்டும்.
விஜய் பிரதமராக வர வேண்டும் என்று அவர் மீது பற்று உள்ளவர்கள் சொல்லும் கருத்து. இது விஜய்யின் கருத்து என்று ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டும் என்று தவெகவின் முன்னணி நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. முதலமைச்சருடன் நெருக்கமாக உள்ள தவெக தலைவர்கள், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். விஜய், தவெக மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டு இருக்கவில்லை என்பது தான் என்னுடைய கருத்து.
விஜய் பிரதமராக வேண்டும் அவரது கட்சியினர் சொல்லும் விருப்பத்தில் தவறு இல்லை. என்னை கூட கட்சியினர் முதலமைச்சராக வேண்டும் என்று விருப்பத்தை சொல்கின்றனர். தவெக கூட்டணியில் இருப்பதால் கட்சியினர் சொல்வது தவெகவிற்கு எதிரான நிலைப்பாடா. திமுக கூட்டணியில் இருந்தபோது கூட சொன்னார்கள், அது கட்சியினரின் ஆசை வெளிப்பாடு. இதை தவறு என்று சொல்ல முடியாது. ஜனநாயகத்தில் எந்த விருப்பமும், நோக்கமும் கொண்டு இருக்கலாம். விஜய் மீது பற்று கொண்டவர்கள் சொல்லும் கருத்து கட்சியின் நிலைப்பாடு என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.
பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவுச் செய்வதற்கு தவெக பயப்படுகிறது என்று உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு தவெக தான் பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் பெண்களை அதிகார மையத்தில் அமர வைப்பது தொடர்ந்து வருகிறது. இதை ஜனநாயகத்தின் வளர்ச்சியாக தான் பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.