📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 23, 2026 07:03 AM

 புதிய தலைமை செயலகம் கட்டுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

 புதிய தலைமை செயலகம் கட்டுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, பட்டினப்பாக்கத்தில், 1,200 கோடி ரூபாயில், புதிய தலைமைச் செயலகம் கட்டும் அறிவிப்பை, சமீபத்தில் முதல்வர் விஜய், சட்ட சபையில் வெளியிட்டார்.

அங்குள்ள தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலத்தில், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையை, செப்.,8ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது.

இதற்கு, அரசியல் கட்சியினரும், மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வேலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில், சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் ஒப்புதல் பெறப்பட்டது குறித்து, எந்த குறிப்பும் இல்லை. பட்டினம்பாக்கம் பகுதியில், ஏராளமான பள்ளிகள் அமைந்துள்ளன.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த, இந்த பகுதியில், தலைமைச் செயலகம் அமைத்தால், பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும், அந்தப் பகுதியில் உள்ள ஒன்பது மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கும், கடுமையான பாதிப்பு ஏற்படும்.

கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியான பட்டினப்பாக்கத்தில், கடற்கரையிலிருந்து 500 மீட்டர் துாரத்திற்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது.

அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், 1,200 கோடி ரூபாய் செலவில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை தன்னிச்சையானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான கே.கே.ரமேஷ் என்பவரும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.