புதிய தலைமை செயலகம் சென்னையில் எங்கே அமைகிறது?
- நமது நிருபர் -
தமிழகத்தின் புதிய தலைமை செயலகம் எங்கே அமைய உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் நிலவும் இடநெருக்கடியை சரிசெய்ய, புதிய தலைமை செயலகம் கட்ட, முந்தைய ஆட்சியில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், எதுவும் கைகூடவில்லை.
இந்நிலையில், 'அடுத்த, 100 ஆண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டசபை மற்றும் தலைமை செயலகம் சென்னையில், 20 லட்சம் சதுரடி பரப்பளவில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்' என, முதல்வர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி, புதிய தலைமை செயலகம் எங்கு அமைய உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என, த.வெ.க., அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, ஆட்சிக்கு வந்த ஓரிரு வாரங்களிலேயே, அதற்கான பணி தொடங்கப்பட்டு விட்டது.
அதற்காக, சென்னை கோயம்பேடு பஸ் முனையம், கிண்டி நெடுஞ்சாலைத்துறை வளாகம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் துறை சார்ந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், கடலுக்கு அருகேயுள்ள பட்டினம்பாக்கம் பகுதி, முதல்வர் விஜய் தரப்புக்கு பிடித்துப் போனது. இந்த இடத்தை முந்தைய முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் ஏற்கனவே தேர்வு செய்துள்ளனர். பட்டினம்பாக்கம் பகுதி, கடலுக்கு அருகே இருப்பதால், கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.
அதன்படி, கடலுக்கும் தலைமை செயலகத்துக்கு தேர்வான இடத்துக்கும் இடையில் இணைப்பு சாலை உள்ளது. இதனால், கடலோர ஒழுங்குமுறை மண்டலம் நிலை 2ன் கீழ், அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதற்கான அனுமதி கிடைத்தவுடன், தலைமை செயலகம் எங்கே அமைய போகிறது என்ற அறிவிப்பு வெளியாகும். அதேநேரத்தில், தலைமை செயலகத்துக்கான தகுதியான இடங்களை ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.