படகுப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்.. 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் சத்நாம்
படகுப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்.. 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் சத்நாம் - சல்மான் அபாரம்
நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் துடுப்புப் படகு விளையாட்டில் இந்தியா தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றியது. ஆடவருக்கான இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய ஜோடியான சத்நாம் சிங் மற்றும் சல்மான் கான் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், சத்நாம் - சல்மான் கூட்டணி இலக்கை 6:13.25 நிமிடங்களில் எட்டி 3-வது இடத்தைப் பிடித்தது. இந்தப் போட்டியில் சீனா தங்கப் பதக்கத்தையும், உஸ்பெகிஸ்தான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன. உஸ்பெகிஸ்தான் வீரர்களை விட வெறும் 2.76 வினாடிகள் மட்டுமே பின்தங்கிய இந்திய ஜோடி, வெண்கலப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தியது.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் அசாத்திய வேகத்தை வெளிப்படுத்தினர். 500 மீட்டர், 1000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் தூரம் வரை சீன வீரர்களுக்கு மிகக் கடுமையான நெருக்கடி கொடுத்து தொடர்ந்து 2-வது இடத்திலேயே நீடித்தனர். கடைசி கட்டத்தில் வேகம் சற்றே குறைந்ததால் 3-வது இடத்திற்குச் சென்றாலும், பதக்க வாய்ப்பைத் தவறவிடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.
முன்னதாக, ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் பல்ராஜ் பன்வார் நூலிழையில் பதக்கத்தை நழுவவிட்டு அதிர்ச்சி அளித்தார். 1500 மீட்டர் தூரம் வரை அசைக்க முடியாத 2-வது இடத்தில் நீடித்த அவர், கடைசி 500 மீட்டரில் வேகத்தை இழந்து 6:54.80 நிமிடங்களில் கடந்து ஏமாற்றத்துடன் 4-வது இடத்தைப் பிடித்தார்.
பல்ராஜ் பன்வாரின் பதக்கம் பறிபோனதால் ஏற்பட்ட சோகத்தை, அடுத்த சில நிமிடங்களிலேயே சத்நாம் - சல்மான் ஜோடி தங்களது வெண்கலப் பதக்க வேட்டையின் மூலம் போக்கி இந்திய அணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது.