Lenin Pandian Review: லெனின் பாண்டியன் விமர்சனம்.. சிவாஜி கணேசனின் பேரன் நடிப்பு எப்படி?
சென்னை: சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் டி. டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் லெனின் பாண்டியன்.
இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதேபோல், ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோரும் நடித்துள்ளனர்.
லெனின் பாண்டியன் கதை: அப்பா போலீஸாக இருக்கும்போது இறந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, கதாநாயகனுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. ஆனால், போலீஸ் வேலைக்கு அவர் பொருந்தவில்லை என சக போலீஸ்காரர்கள் அவரை ஏளனம் செய்து, அவருக்கு எடுபிடி வேலையே கொடுக்கின்றனர்.
ஒருபுறம், மணல் கொள்ளைக் கும்பலால் தான் ஆசையாக வளர்த்த ஆட்டை இழந்த விவசாயி. மணல் கொள்ளை பற்றி புகார் கொடுக்க, இதனால் அவரது உயிருக்கு ஆபத்து வர, அவருடைய பாதுகாப்புக்காக ஒரு போலீஸ்காரரை நீதிமன்றம் அவருக்கு வழங்குகிறது. அப்படி போலீஸாக நியமிக்கப்படும் நபர்தான் கதாநாயகன். அதற்குப் பிறகு இந்தக் கதையில் என்னென்ன நடந்தது என்பதுதான் இந்த 'லெனின் பாண்டியன்' படம்.
படம் எப்படி இருக்கு?: கதாநாயகன் தர்ஷன் கணேசன் தன்னுடைய முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். அப்பாவியான விவசாயி மற்றும் அவரது மனைவி கதாபாத்திரத்தில், கங்கை அமரனும், நடிகை ரோஜாவும் அவர்களுடைய அனுபவத்தை நடிப்பில் காட்டியுள்ளனர். இவர்களைத் தாண்டி, மற்ற நடிகர்களும் படத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிளஸ்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அதிக இசை இல்லாத ஒரு மென்மையான இசையை இளையராஜாவின் மேஜிக்கால் திரையில் கேட்க முடிந்தது. அதுபோக, முதல் மரியாதை படத்தின் பாடல்களை ஆங்காங்கே பயன்படுத்தியது, பழைய இளையராஜாவை நினைவுக்கு கொண்டுவருகிறது. படத்தின் ஒளிப்பதிவு மற்றும் கலை சிறப்பாக அமைத்துள்ளனர். முக்கியமாக, கலை அமைப்பு நிஜ உணர்வைத் தருகிறது. மணல் கொள்ளை, அதற்குத் துணை போகும் போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள், அதிகாரத்தை எப்படியெல்லாம் மக்கள் மீது திணிக்கிறார்கள் என தனது ஆதங்கத்தை இயக்குநர் சொன்ன விதம் படத்திற்கு பலம். "அதிகாரிகள் என சொல்லி பழகாதீங்க.. அலுவலர் என சொல்லுங்க" என நீதிமன்றத்தில் மரியம் ஜார்ஜ் பேசும் வசனமெல்லாம் அடிபொலி.
மைனஸ்: கதையாக ஒரு சில படங்களின் சாயல் தெரிவது படத்துக்கு மைனஸ் ஆக மாறுகிறது. ஆனாலும், இந்தக் கதை சொல்ல வரும் உணர்வு வேறு என்பதால் அது பெரிதாக தெரியவில்லை. காதல் காட்சி, பாடல்கள் என கூடுதல் நேரம் அதற்கு செலவிடாமல், கதை காட்சிகளில் கவனம் செலுத்தியுள்ள விதம் ஆறுதல். ஒரு சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைந்தாலும், முழுப் படமாகப் பார்க்கும்போது அது தெரியவில்லை. குறிப்பாக, 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், குடும்பங்களுக்கும் நீங்கள் விரும்பும் படமாக இது இருக்கும். கமர்ஷியலாக எந்தளவுக்கு வெற்றிப் பெறும் என்பது டவுட்டு தான்.