பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு பிளஸ் 2 தேர்வு மார்ச் 3; 10ம் வகுப்புக்கு மார்ச் 17
பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு பிளஸ் 2 தேர்வு மார்ச் 3; 10ம் வகுப்புக்கு மார்ச் 17
சென்னை: தமிழகத்தில் 2026-27ம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரையும் நடைபெறுகிறது. பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் உத்தேச தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில் பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2026-27ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று வெளியிட்டார்.
அதன்படி, பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 3ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள், மார்ச் 8ம் தேதி ஆங்கிலம், மார்ச் 12ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 15ம் தேதி கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், மனையியல் உள்ளிட்ட பாடங்களுக்கும், மார்ச் 19ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
மார்ச் 23ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள் உள்ளிட்ட பாடங்களுக்கும், இறுதி நாளான மார்ச் 29ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகின்றன. பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 8ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறும். பொதுத்தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்குகிறது.
அன்றைய தினம் தமிழ்ப் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 25ம் தேதி ஆங்கிலம், மார்ச் 31ம் தேதி கணிதம், ஏப்ரல் 5ம் தேதி அறிவியல், ஏப்ரல் 9ம் தேதி சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. இறுதி நாளான ஏப்ரல் 12ம் தேதி விருப்ப பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது. இதன் மூலம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 12ம் தேதியுடன் நிறைவடைகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறும். பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பிளஸ்-1 வகுப்பில் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மார்ச் 5ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள், மார்ச் 16ம் தேதி ஆங்கிலம், மார்ச் 18ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
மார்ச் 22ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கும், மார்ச் 24ம் தேதி இயற்பியல், பொருளாதாரவியல் உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 30ம் தேதி கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் உள்ளிட்ட பாடங்களுக்கும், ஏப்ரல் 1ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும்.
காலை 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை படிக்கவும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்களை சரிபார்க்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு எழுதலாம். பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொள்ள உள்ளன. மாணவர்கள் பாடவாரியாக தேர்வுக்கு தயாராகும் வகையில் தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன.