மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி முறைகேடு: தி.மு.க. நிர்வாகியின் கணவர் கைது
வரிவிதிப்பு முறைகேடு விவகாரத்தில் மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார். இதில் மேலும் சிலர் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.
மதுரை மாநகரில் வணிக வளாகங்கள். ஓட்டல்கள், திருமண மண்டபம், விடுதிகள் என சுமார் 2000 கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்ததில் சுமார் ரூ.200 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
2022 முதல் 2024-ம் ஆண்டு காலக்கட்டத்தில் நடந்த இந்த முறைகேடு பற்றி ஆய்வு செய்தபோது அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி, இவ்வாறு கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தி.மு.க.வை சேர்ந்த மேயர் இந்திராணி, 5 மண்டலங்களின் தலைவர்கள், 2 நிலைகுழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.
விசாரணை குழு
இந்த விவகாரத்தில் முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், வரிவிதிப்புக்குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், உதவி கமிஷனர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 25 பேர் வரை ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் விசாரணை
இதுகுறித்து மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மதுரை சரக டி.ஐ.ஜி.யிடம் மீண்டும் புகார் கொடுத்தனர்.
முறைகேடுகளில் ஈடுபட்ட சிலரை தப்பவைக்க போலீசாரும் உதவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே இதுகுறித்த விசாரணை மீண்டும் சூடு பிடித்தது.
இந்தநிலையில், நேற்று அதிகாலையில் மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல முன்னாள் தலைவர் புவனேஸ்வரி வீட்டுக்கு சென்று அவரது கணவர் சரவணனை, வரிவிதிப்பு முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அதே நேரத்தில் முன்னாள் தெற்கு மண்டல தலைவர் முகேஷ்குமார், முன்னாள் மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வியின் கணவர் மிசா பாண்டியன், மேற்கு மண்டல தலைவரின் கணவர் விமல் ஆகியோரையும் தேடி அவர்களது வீடுகளுக்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
தி.மு.க.வினர் எதிர்ப்பு