போலித் தமிழ்ப் பாசம்... ராகுல் காந்தியின் அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்
போலித் தமிழ்ப் பாசத்துடன் வேடமிடும் ராகுல் காந்தியின் அரசியல் நாடகத்தை, விழிப்புணர்வு பெற்ற தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
"தமிழகத்தைத் தொட விடமாட்டோம். தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாப்போம்" என்று ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் மேடைகளில் முழங்குவது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை மற்றும் வரலாற்று மோசடி! தமிழகத்தின் உரிமைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் காலில் போட்டு மிதித்த துரோக வரலாறுதான் காங்கிரசின் அடையாளம்.
தமிழைப் பற்றிப் பேச ராகுல் காந்திக்கோ அல்லது தம்பி மாணிக்கம் தாகூர் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கோ என்ன தார்மீக உரிமை இருக்கிறது? தமிழகத்திற்கு காங்கிரஸ் இழைத்த வரலாற்றுத் துரோகங்களுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா?
இலங்கையில் 1.5 லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக உயிருடன் கொல்லப்பட்டபோது ராஜபக்சேவின் பாசிச அரசுக்கு ஆயுதமும் பணமும் கொடுத்துத் துணை நின்றது மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுதானே? தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான கச்சத்தீவைத் தன்னிச்சையாக இலங்கைக்குத் தாரைவார்த்து, இன்று வரை பல ஆண்டுகளாக நமது மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படுவதற்குக் காரணமானது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தானே?
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை “காட்டுமிராண்டித்தனம்" எனக் கொச்சைப்படுத்தி, அதற்குத் தடை விதித்தது காங்கிரஸ் ஆட்சி அல்லவா? மொழிவாரி மாநிலங்கள் உருவான காலத்திலிருந்தே, இந்தி மொழியைத் தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணித்து, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்நாட்டு இளைஞர்கள் இன்னுயிரை இழக்கக் காரணமானது அப்போதைய காங்கிரஸ் அரசுதானே?
காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை மறுப்பதும், மேகதாதுவில் அணை கட்டித் தமிழகத்தைப் பாலைவனமாக்கத் துடிப்பதும் கர்நாடக காங்கிரஸ் அரசு. இதைத் தட்டிக்கேட்க தம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குத் துணிவு உண்டா? வரலாறு முழுக்கத் தமிழர்களை வஞ்சித்துவிட்டு, இப்போது போலித் தமிழ்ப் பாசத்துடன் வேடமிடும் ராகுல் காந்தியின் அரசியல் நாடகத்தை, விழிப்புணர்வு பெற்ற தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.